போஸ்டர் செய்தி

சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது: ஜனாதிபதி வழங்கினார்

சென்னை, மார்ச் 16–

தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருதை ஜனாதிபதி வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என அனைத்து விருதுகளையும் சேர்த்து மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் முதல் கட்டமாக 56 பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. பிரபுதேவா, சங்கர் மகாதேவன், மலையாள நடிகர் மோகன்லால், டிரம்ஸ் சிவமணி, தமிழகத்தை சேர்ந்த பங்காரு அடிகளார் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இன்று 2வது கட்டமாக 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்

தமிழகத்தில் மதுரை மாவட்ட சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நடிகர் மனோஜ் பாஜ்பாய், கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேஷாத்ரி, வில்வித்தை வீராங்கனை பாம்பேலா தேவி லாய்ஷ்ரம், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கூடைப்பந்து வீரங்கனை பிரசாந்தி சிங் ஆகியோருக்கும், தபேலா கலைஞர் சுவப்பன் சவுத்ரி, பொது விவகாரங்கள் துறை எச்.எஸ்.போல்கா, ஒடிசாவில் தேநீர் கடை நடத்தி ஏழை குழந்தைகள் படிக்க உதவும் பிரகாஷ் ராவ், நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.

நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ்

தமிழகத்தைச் சேர்ந்த நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியம்), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், மூத்த தொழில் அதிபர் மகாசேய் தரம்பால் குலாடி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரி பால் உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

சின்னப்பிள்ளை

சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில்பிறந்து, பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார். எழுதப் படிக்கத் தெரியாதவராக இருப்பினும், கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை. கடந்த 2001-ம் ஆண்டு மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதை சின்னப்பிள்ளைக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விருது வழங்கி, சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *