சிறுகதை

சமூக இடைவெளி – ராஜா செல்லமுத்து

மதனும் ஆனந்தியும் படித்தது ஒரே கல்லூரி. ஒரே ஊர். ஒரே பேருந்தில் தான் கல்லூரிக்குப் பயணம். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. அடிக்கடி பேசச் சந்தர்ப்பம்.

கீழத்தெரு மதனுடன் ஆனந்தி அடிக்கடி பேசுவது குறித்து அவ்வப்போது அவள் வசிக்கும் தெருவில் சண்டை வரும். அத்தனையும் ஒத்த ஆளாய்ச் சமாளிப்பாள் ஆனந்தி.

“இங்க பாரு ஆனந்தி, அந்த கீழத் தெரு பையனோட சகவாசம் நமக்கு சரிப்பட்டு வராது. ஏதோ போனமா படிச்சமான்னு வரணும். அத விட்டுட்டு அங்கன இங்கனன்னு அந்தப் பய கூட பேசிட்டு இருக்கிறது நம்ம வம்சத்துக்கு சரிப்பட்டு வராது பாத்துக்கோ. நாங்க சொல்றத விட்டுட்டு மேக்கொண்டு ஏதாவது செய்யணும்னு நெனச்சே…. அம்புட்டு தான். அந்தப் பயலும் உசுரோட இருக்க மாட்டான். ஒன்னையும் பெத்த புள்ளன்னு பாக்க மாட்டேன்; கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுருவேன். போனமா படிச்சமான்னு வரணும். இல்ல வெனை தான் வரும் ” என்று ரொம்பவே வீராப்பாகப் பேசினார் ஆனந்தியின் அப்பா பாலசேகர்.

“அப்பிடியெல்லாம் ஏதும் இல்லப்பா. கூடப் படிக்கிறவன்; அதான் பேசுறேன். இல்லன்னா அவன திரும்பிக் கூட பாக்க மாட்டேன். நீங்க நினைக்கிறது மாதிரியெல்லாம் எதுவும் நடக்காதுப்பா. தைரியமா இருங்க. நான் ஒன்னோட புள்ளப்பா” என்று அப்பாவின் கோபத்திற்கு ஆரத்தி காட்டினாள் ஆனந்தி.

நாட்கள் நகர்ந்தன.

யார் சொல்லியும் கேட்காத இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இரவு முழுக்க விழித்திருந்தனர்.

வாட்ஸ்அப், பேசாமலே பேசியது ஃபேஸ் புக், இருவரின் செல்பாேன் இணைப்பும் துண்டிக்கப்படாமலே தொடர்ந்தன.

ஆழப்பதிந்த அன்பின் மிகுதியால் இருவரும் காதலர்கள் ஆனார்கள். ஊர் முழுக்க சுவரொட்டி ஒட்டாமலேயே விளம்பரமானார்கள். அதனால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள் ஆனந்தி. மதன் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருந்தாலும் அவனின் மரணத் தேதியைக் குறித்தார் ஆனந்தியின் அப்பா.

“அந்தப் பயல எங்க இருந்தாலும் தல வேற முண்டம் வேறன்னு ஆக்குங்க. குடிக்க கஞ்சியும் குடியிருக்க வீடுமில்லாதவனுக்கெல்லாம் பணக்கார வீட்டுப் பொண்ணு கேக்குதோ? பயல வெட்டிட்டு வந்து என்னப்பாருங்க” என்று கூலிப்படையை ஏவி விட்டார் பாலசேகர்.

“தம்பி மதனு…. நமக்கு எதுக்குய்யா, வேண்டாத வேல. காலேசு போனமா, படிச்சமான்னு இல்லாம எதுக்குய்யா வீண்வம்பு. இந்தப் புள்ள என்னய்யா, இத விட அழகான புள்ளையா ஒனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அந்தப் புள்ளையோட அப்பன் சொந்த பந்தமெல்லாம் சீறு கெட்ட பயலுக. நாளப் பின்ன ஏதாவது ஒன்னு நடந்துச்சுன்னா எங்களால தாங்க முடியாது சாமி….ஆங்….ஆங்…என்று ஒப்பாரி வைத்தாள் மதனின் அம்மா ரங்கம்மா.

“ஏன் இப்பிடி ஒப்பாரி வச்சிட்டு இருக்க? நீ நினைக்கிற மாதிரி எதுவும் இங்க நடக்காது. போ…போ…”என்று அம்மாவைத் துரத்தினான் மதன்.

“தோளுக்கு மேல வளந்த பயல எதுவும் சொல்ல முடியாதுய்யா. இதெல்லாம் கேட்டா நமக்குத் தான் அசிங்கம்” என்ற மாடசாமியும் தன் பங்குக்கு ஏதோ சொல்லி வைத்தார்.

இப்படி, ஊர் உறவுகள் எல்லாம் சொல்லிப் பார்த்தும் காதல் ஜோடி ஒரு இரவு நேரம், ஊரை விட்டு ஓடியது. அந்த ஊர் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது காதல் விவகாரம்.

“மாமா, இப்ப ‘ம்’ ன்னு சொல்லு. அவங்க ரெண்டு பேரு தலயும் ஒன்னோட காலடியில கொண்டு வந்து போடுறேன். அமுங்கினி மாதிரி இருந்திட்டு என்ன காரியம் பண்ணிட்டா பாருங்க இந்த ஆனந்தி. அவளையும் விடக் கூடாது. அந்தப் பயலையும் விடக் கூடாது” என்று ஆனந்தியின் உறவுகள் எல்லாம் அரிவாள் தீட்டினார்கள்.

மதனின் உறவுகள் எல்லாம் மெளனம் சாதித்தார்கள். ஆனந்தியின் வீட்டார்களால் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாமென்று பயத்தின் பிடியில் பம்மிக் கிடந்தார்கள்.

“ஏய்….. தரங்கெட்ட பயலுகளா? தண்டியும் தாக்குமா ஒரு பொண்ணு இருந்தா, அவள காதல்ங்ற பேர்ல மயக்கி கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ணிட்டு அவ அப்பன், அம்மா சம்பாரிச்ச சொத்துல ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசப்படுறது. இதெல்லாம் ஒரு பொழப்பாடா? த்தூ…… அந்த மானங்கெட்ட நாய்க, எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு வெட்டிச் சாய்க்காம விடமாட்டோம் ” என்று கொக்கரித்துச் சென்றனர் ஆனந்தியின் உறவினர்கள்.

எதற்கும் எதிர்பேச்சுப் பேசாமல் இருந்தனர் மதனின் குடும்பத்தார்கள். காதலர்கள் ஓடிப் போய் ஒரு மாதத்திற்கு மேலாகிப் போனது. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த ஆனந்தி வீட்டார்களின் கோபத் தீ கொஞ்சங் கொஞ்சமாய் அடங்கியது. ஊருக்குள் புகைந்து கொண்டிருந்த அவச்சொற்களும் கொஞ்சம் அடங்கியிருந்தன.

ஒருநாள் …

ஆனந்தியின் வீட்டிற்கு வந்த உறவினர் பாலசேகரைக் கட்டிப் பிடித்து அழுதார்.

“தவமிருந்து பெத்த ஒன்னோட ஒத்த மக ஆனந்தி, யார் வீட்டுத் துணிகளையோ அயர்ன் பண்ணிட்டு இருக்கு. இந்த பொழப்பு தேவையா? ஒம் மக நம்ம வம்சத்தையே தல குனிய வச்சுப்புட்டா” என்று அழுதார்.

அவர் அழுவதைப் பெரிதுபடுத்தாத ஆனந்தியின் அம்மா லட்சுமி, மகள் எப்படி இருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்று கேட்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினாள்.

ஒரு வழியாக அந்த மனிதரிடம் கோபப்படுவது போல கோபப்பட்டு, மகள் இருக்குமிடத்தின் முகவரியை வாங்கினார் பாலசேகர்.

“லட்சுமி…. லட்சுமி.. ஆனந்திய பாக்கணும் போல ஆசையா இருக்குடி. நம்மள விட்டுப் போயி ரொம்ப நாளாச்சு. என்னமோ தெரியல கண்ணுக்குள்ளயே இருக்கா ஆனந்தி. வா…ஒரு எட்டு போயி அவள பாத்திட்டு வருவோம் ” என்று கெஞ்சினார் பாலசேகர்.

“அதான புள்ள பாசம் எப்பிடி விட்டுப் போகும். ஊருக்குள்ள மரியாத அது இதுன்னு கத்துனாலும் நம்ம புள்ள நமக்கு வேணும்ங்க. இன்னைக்கே போய் பாத்திட்டு வருவோம் ” என்று லட்சுமியும் பிடி கொடுத்தாள்.

அன்று அதிகாலை மூன்று மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினர். கையில் பைகள். ஆனந்திக்கு பிடித்த பலகாரங்கள். வீட்டுச் சமையலுக்குத் தேவையான பொருட்கள் என்று எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். அதிகாலை நேரம் என்பதால் யாரோ வருகிறார்கள் என்று நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. அது குரைக்கும் சத்தம் ஊரைக் கூட்டுவது போல் இருந்தது.

“ச்சீ…போ…போ” என்று குரைக்கும் நாய்களைத் துரத்தி விட்டாள் லட்சுமி.

“இந்த நாய்களே நம்மள காட்டிக் குடுத்திரும் போல. இப்படி கொலச்சிட்டு இருக்குக” என்று பாலசேகர் நாய்களைத் துரத்தி விட்டார். குரைத்த நாய்கள், இருவரையும் சுற்றிச் சுற்றி வந்து, உள்ளூர் உறவுகள் தான் என்று தூர ஓடின.

“யாரும் கேட்டா என்னங்க சாெல்றது?” என்று லட்சுமி கேட்க….. “சாமி கும்பிட ஊருக்கு போறமுன்னு பொய்சொல்ல வேண்டியது தான்” என்றார் பாலசேகர்.

அவர்கள் ஊரை விட்டுக் கிளம்பும் போது ஒரு சிலர் பார்த்தார்கள். அவர்களுக்குப் புன்னகையைப் பதிலாகவும் வேறு சிலருக்கு வேறு ஒரு விஷயத்திற்காக போகிறோம் பதிலையும் சொல்லி விட்டு சென்றார்கள்.

ஒரு வழியாக ஆனந்தி இருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து போகும்போது அங்கே யாருடைய துணிமணிகளையோ அயர்ன் செய்து கொண்டிருந்தாள் ஆனந்தி. இதைப் பார்த்த லட்சுமிக்கு அழுகை பொத்துக்கிட்டு வந்தது. அப்பாவையும் அம்மாவையும் பார்த்த ஆனந்திக்கு அவளையும் மீறி அழுகை பீறிட்டது.

அம்மா என்று லட்சுமியின் காலடியில் விழுந்து கதறி அழுதாள் ஆனந்தி. அவளைத் தொட்டுத் தூக்கித் தலை கோதினாள் லட்சுமி.

“என்னம்மா, நம்ம வீட்டில ராணி மாதிரி வளர்ந்த பிள்ள, இங்க வந்து யார் யார் துணியையோ சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு? என்று தலையில் அடித்துக் கொண்டு கலங்கி நின்றாள் லட்சுமி.

பாலசேகரும் அழுது கொண்டிருந்தார்.

வீட்டிற்குள் வந்த மதன் அவர்களைப் பார்த்து விரைத்து நின்றான். எதுவும் பேசவில்லை. தூக்குவாளி எடுத்துப்போய் வீதி கடையில் டீ வாங்கி வந்தான்.

“வா வீட்டுக்கு போலாம். இனிமே நீ இங்கிருக்க வேணாம்” என்று லட்சுமி கூப்பிட்டாள்.

இல்லம்மா, வேண்டாம். நான் அங்க வந்தா உங்களுக்கு அவமானமா இருக்கும். நான் இங்கயே இருந்துட்டு போறேன்” என்று ஆனந்தி சொன்னாள்.

பாலசேகர் எதுவும் பேசவில்லை. தன் மகளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனந்தியும் அப்பாவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. தவறு செய்த குற்ற உணர்வு அவளைக் குத்திக் குடைந்து கொண்டிருந்தது.

ஒருவழியாக அழுது தொழுது விடைபெற்று அம்மாவும் அப்பாவும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

அதுமுதல் அப்பாவும் அம்மாவும் ஆனந்தியின் வீட்டிற்கு நடுச்சாமத்தில் வந்து குசலம் விசாரிப்பதும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டுப் போவதுமாயிருந்தனர். இது ஆனந்திக்கும் மதனுக்கும் ரொம்பவே ஆதரவாக இருந்தது.

மாதங்கள் உருண்டோடின.

நிறை மாத கர்ப்பிணியாக நின்றாள் ஆனந்தி.

தன் மகள் தாயாகப் போகிறாள் என்ற பூரிப்பு லட்சுமிக்கு ரொம்பவே இருந்தது. ஊருலகம் சாதிசனம் அத்தனையும் தூக்கி எறிந்து விட்டு தன் மகளைத் தன் வீட்டிற்கு கூட்டி வந்தாள்.

“எம் மக ஒலகத்தில இல்லாததயா பண்ணிப்புட்டா. அவ மனசுக்கு பிடிச்சவங்க கூட ஓடிட்டா. இதுல என்ன தப்பு இருக்கு? தலைக்கு மேல வெள்ளம் போனா சாண் என்ன? முழம் என்ன? போனது போகட்டும்” என்று எல்லா வாயையும் ஒரே வார்த்தையில் மூடினாள் லட்சுமி.

தன் மகளின் நிறைமாத கர்ப்பத்திற்கு சீமந்தம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டாள் லட்சுமி.

“சாதி விட்டு சாதி போன பொண்ணுக்கு சீமந்தம் வேற ஒரு கேடா? நான் வரல” என்று உறவுகள் ஒரு சிலர் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் இதெல்லாம் சகஜமப்பா அதனால என்ன இருக்கு?” என்று சீமந்தத்திற்குச் சிலர் புறப்படத் தயாரானார்கள். இது நோய் காலம் என்பதால் சமூக இடைவெளி, ஒருவருக்கொருவர் தொட்டுப் பேசுதல் என்று எதுவும் இருக்கக் கூடாது” என்று அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி சீமந்தப் பத்திரிகை அடித்து ஊருக்கெல்லாம் கொடுத்தாள் லட்சுமி.

“அம்மா இதெல்லாம் வேண்டாம்மா. நான் தான் உங்க கூடவே இருக்கேன்ல. இனி எதுக்கு இந்த விழாவெல்லாம்? என்று ஒரேடியாகத் தட்டிக் கழித்தாள் ஆனந்தி.

“நீ சும்மா இரு. ஒன்னோட கல்யாணத்த தான் என் கண்ணால பாக்கல. உங்க ரெண்டு பேத்தையும் ஜோடியா பாக்கணும்னு நினைச்சேன்; அதுவும் நடக்கல. உன் வயித்துல கெடக்கிறது பேரனோ? பேத்தியோ? தெரியாது. ஒன் கண்ணழகு பாத்து ரொம்ப நாள் ஆச்சு. என் மகளை சீரு, செனத்தியோட சீமந்தம் வச்சு, இந்த ஊரு உலகத்துக்கெல்லாம் என் மக தாயாக போறான்னு நான் சொல்லணும். அதனால தான் இந்த விழாவ கொண்டாடும்னு நினைக்கிறேன்” என்று வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தாள் லட்சுமி.

மதனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான், ‘‘அதெல்லாம் முடியாது. ஒங்க வேலைய பாருங்க. என் புள்ளைக்கு நாங்க செய்றத செஞ்சுதான் விடுவோம்” என்று லட்சுமியும் பாலசேகரனும் சீமந்த விழா நடத்துவதில் குறியாக இருந்தார்கள்.

ஒருவழியாக சீமந்த நாளும் வந்தது.

ஊர், உறவுகள், சொந்த, பந்தம், தெரிந்தவர், தெரியாதவர், உற்றார், உறவினர்கள் என்று அத்தனை பேர்களும் சீமந்தத்திற்கு வந்தார்கள். வகை வகையான உணவுகள், வளையல்கள் என்று ஆனந்திக்கு சூட்டினார்கள். வந்த பெண்கள் எல்லாம் ஆனந்தியின் சந்தன கன்னத்தில் சந்தனம், குங்குமம்,பொட்டு வைத்தார்கள். கேமராக்கள் அத்தனையும் கிளிக் செய்தன.

ஆனந்திக்கும் மதனுக்கும் ஏக சந்தோஷம். மதனின் குடும்பம் இதில் கலந்து கொண்டார்கள். தன் மகனை விரோதியாக இல்லாமல் வீட்டோடு சேர்த்துக் கொண்டது ரங்கம்மாவுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

நாட்கள் நகர்ந்தன.

ஆனந்தி எட்டு வைத்தால் கூட தட்டு வைத்துத் தாங்கும் அளவிற்கு வீட்டில் தாங்கினார்கள். சில நாட்களில் அவளுக்கு உடம்பில் காய்ச்சல் கண்டது. புள்ளத்தாச்சி உடம்புல சூடு இருக்கும் என்று கசாயம் வைத்துக் கொடுத்தார்கள். காய்ச்சல் தீர்ந்தபாடில்லை.

“வாயும் வயிறுமா இருக்கிற பிள்ளைய வீட்டில வச்சு கசாயம் குடுக்குறது சரிப்பட்டு வராது. ஆஸ்பத்திரி கூட்டிப் போங்க” என்று வயதான ஒரு கிழவி சொன்ன போது ஆனந்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கே பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் ஆனந்திக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தகவல் வந்தது.

அரசாங்கம் இவ்வளவு சொல்றாங்க. உங்களுக்கெல்லாம் அறிவு இல்லையா? சமூக இடைவெளி வேணும். விழா நடத்தக் கூடாது. முகக்கவசம் போடணும். அப்படின்னு எவ்வளவு தூரம் சொல்றாங்க. நீங்க அதெல்லாம் விட்டுட்டு, இப்படி ஒரு விழா நடத்தி இருக்கீங்களே? இப்ப இந்த புள்ளத்தாச்சி பிள்ளைக்கு பிரச்சினை, என்ன பண்ணப் போறீங்க? என்று விளாசித் தள்ளினார் மருத்துவர்.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள் ஆனந்தி.

நடந்து முடிந்த அத்தனை நினைவுகளும் மதன் எண்ணத் திரையிலிருந்து வழிந்தோடியது.

இப்போது ஆனந்தி இருக்கும் அறையில் இருந்து ஒரு செவிலித்தாய் ஓடி வந்தாள்.

“ஆனந்தி கூட வந்திருக்கிற சொந்த பந்தங்கள் யாரு? என்று கேட்டபோது, அமர்ந்திருந்த அத்தனை சொந்தங்களும் எழுந்து ஓடினார்கள்.

சொல்வதற்குத் தயக்கப்பட்ட, அந்த செவிலித்தாய், கடைசியில் சொல்லியே விட்டாள்.

“நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணனோம். ஆனந்திய எங்களால காப்பாத்த முடியல. அவங்க இறந்துட்டாங்க. வயித்துக்குள்ள இருக்கிற அந்த சிசுவும் இறந்து போச்சு” என்று அந்த செவிலித்தாய் சொன்ன போது அந்த மருத்துவமனையே அதிரும்படி அலறினான் மதன்.

‘‘எம் பொண்டாட்டியும் புள்ளையும் எப்பிடியாவது காப்பாத்துங்க……. எம் பொண்டாட்டியும் புள்ளையும் எப்பிடியாவது காப்பாத்துங்க….’’ என்று அவன் அழுத சத்தம் அந்த மருத்துவமனையை விழுங்குவது போல இருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் நிறைமாத கர்ப்பிணியான ஆனந்தியும் சிசுவும் சேர்த்து பிளாஸ்டிக்கில் கட்டப்பட்டு இரு பொட்டலமாக கொடுத்தனர். உறவுகள் எல்லாம் ஓலமிட்டு அழுதார்கள். இரும்பு படுக்கையில் இருந்த ஆனந்தியைத் தொடுவதற்கு கூட மருத்துவர்கள் சம்மதிக்கவில்லை.

“இவ்வளவு பேரு, இறப்புக்கு போகக் கூடாது. ஒரு அஞ்சு பேரு, பத்து பேரு போங்க. அதுதான் சரி, இல்லைன்னா மறுபடியும் உங்கள்ல யாருக்காவது கொரோனா வந்துரும்” என்று மருத்துவர்கள் எச்சரித்தார்கள்.

ஆனந்தி ஆம்புலன்சில் பிணமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

ஆனந்தியின் உறவினர்களும் பிணத்தின் பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள்.

நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் மதனை முறைத்துப் பார்த்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் மனதில் என்ன விதைத்திருக்கிறார்கள்? என்ன நினைத்திருக்கிறார்கள்? என்பது மதனுக்குத் தெரியும்.

ஆம்புலன்ஸ் முன்னால் போய்க் கொண்டிருந்தது.

காதல் மனைவியை இழந்து நடந்து கொண்டிருக்கும் மதனுக்கும் பிணத்தின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் ஆனந்தியின் உறவினர்களுக்கும் இடையே இப்போது இருந்தது …….. ஒரு “சமூக இடைவெளி”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *