செய்திகள்

சமூகநீதியை நிலைநாட்ட திமுக அரசு பயப்படுகிறது: அன்புமணி ராமதாஸ் தாக்கு

சென்னை, டிச. 10–

தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான் என, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது கூறியதாவது:–

“சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசிற்கு அனைத்து உரிமைகளும், சட்டங்களும் இருக்கிறது என பிரபல சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது’ என தவறான கருத்தை முதலமைச்சரே தெரிவிக்கிறார்.

அப்படியென்றால் எப்படி பீகாரில் நடத்தினார்கள். பீகாரில் கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தும், நீதிமன்றத்தில் எந்த தடையும் கொடுக்கவில்லை. பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் வெளியிட்டார்கள். பீகாரை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசாவும் சாதி வாரி கணக்கெடுப்பு முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர்.

ஆனால், சமூகநீதி பேசும் முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? அச்சம் ஏன்? சாதிகளுக்காக உரிமைகளை, சமூகநீதியைப் பெறும் கட்சிகளாக, இயக்கங்களாகச் செயல்பட வேண்டும். சமூகநீதியின் அடித்தளமே சாதி வாரி கணக்கெடுப்புதான்.

தந்தை பெரியார்தான் காரணம்

சாதி என்றாலே கெட்ட வார்த்தை என்பதுபோல இருக்கிறார்கள். சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். சாதி பெரும்பான்மை அடிப்படையில்தான் தி.மு.க-வில் பதவி கொடுக்கிறார்கள். ஆனால் வெளியில் சாதி, மதம் இல்லை என்கிறார்கள். வாக்கு வங்கிக்ககாக இப்படி நடந்து கொள்கிறார்கள்.

சமூகநீதி என்பது பின்தங்கிய சமுதாயத்தை உயர்த்துவதுதான். மதம், மொழிரீதியாக இட ஒதுக்கீடு இல்லை. ஆனால், சாதிரீதியாக இட ஒதுக்கீடு செய்ய கணக்கெடுப்பு நடத்த ஏன் தயக்கம்? சென்சஸ் என்பது வேறு, சர்வே என்பது வேறு. சர்வேயை மத்திய அரசும், மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் எடுக்கின்றனர். தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்.

6 முறை ஆங்கிலேயர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். ஆங்கிலேயருக்கு புரிந்தது, இப்போதைய தி.மு.க அரசுக்கு புரியவில்லை, தூங்குவதுபோல நடிக்கிறது. இந்தியாவிலயே முதன்முறையாக இட ஒதுக்கீடு கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு தான். பல வரலாறுகள் உள்ள தி.மு.க அரசு, சமூகநீதியை நிலை நாட்ட பயந்துகொண்டிருக்கிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *