சினிமா செய்திகள்

சமுத்திரக் கனியை தோளில் தூக்கி
எஸ் ஏ சந்திரசேகர் வெ(ற்)றி ஓட்டம்!

“80 வயது ஆனால் என்ன… அது உடலுக்குத்தான் … உள்ளத்துக்கு இல்லையே” என்பதை பகிரங்கமாக சொல்லி இருக்கும்  டைரக்டர் -எஸ் ஏ சந்திரசேகர்.

இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு இணையாக களத்தில் ஓடி, கடந்த காலத்தை போலவே மிகவும் குறுகிய காலத்தில்… திட்டமிட்ட பட்ஜெட்டில் “நான் கடவுள் இல்லை” படத்தை கண்ணில் காட்டி இருக்கிறார்.

ஆக்சன்- ஃபார்முலா என்றால் அது பாகு வெல்லத்தை போல எஸ் ஏ சி க்கு. அந்தத் தித்திப்பு சுவை கொஞ்சமும் குறையாமல் விறுவிறுப்போடு காட்சிகளை படம் பிடித்து கதை சொல்லி இருக்கிறார்.

நடுவில் பாதை மாறி பயணித்து சறுக்கி, கசப்பான அனுபவத்தில் தன் நிலை உணர்ந்தவர், இன்று தன்னை திருத்திக் கொண்டும்,புதுப்பித்துக் கொண்டும் களத்தில் கால் வைத்திருக்கிறார் மீண்டும்.

அன்று விஜயகாந்தின் தோள் மீது பாரத்தை சுமத்தியதை போல, இன்று சமுத்திரக்கனி என்னும் ஒற்றை மனிதனின் தோள்களில். அந்த நம்பிக்கையை வீணடிக்கவில்லை சமுத்திரக்கனி. எஸ் ஏ சி க்கு சறுக்காத ஓடுபாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
கொலை – கொள்ளை- நடுங்க வைக்கும் ரவுடி வீச்சருவா வீரப்பனை( சரவணன்)
கைது செய்து சிறையில் அடைக்கிறார் சி பி சிஐடி போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி. சிறையில் இருந்து தப்பித்து விடும் வீரப்பன், போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே கூண்டோடு ஒழித்து கட்டுவேன் என்று கொக்கரிக்கிறான். தண்டனை வாங்கி கொடுத்த வக்கீல், நீதிபதி இருவரையும் மிருக வெறியோடு தீர்த்து கட்டி, போலீஸ் அதிகாரியின் குடும்பத்திற்கும் குறி வைக்கிறான். இதில் அவனுக்கும்- போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் தர்மயுத்தம் ” நான் கடவுள் இல்லை”.


ஆக்சன்- பார்முலாவில், இது என்ன வித்தியாச  தலைப்பு- நான் கடவுள் இல்லை?. கேள்வி எழும், அது கிளைக் கதையாக வருகிறது. கடவுளுக்கு ஒரு குழந்தை எழுதும் கடிதம். ஒரு சந்தர்ப்பத்தில் போலீஸ் அதிகாரியின் மகளும் (வீரப்பன் பிடியில் ஜீவ மரண போராட்டத்தில் இருக்கும் போது) அக்கடவுளுக்கு எழுதும் கடிதம். அதில் இருந்து ஒரு திடீர் திருப்பம்.

அந்த நாள் ஸ்ரீவித்யாவின் நகல் இனியா. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர், யுவன், இமான் அண்ணாச்சி.
இசைக்கு சித்தார்த் விபின். ஸ்டண்டுக்கு பில்லா ஜெகன். காமிரா- மகேஷ் கே தேவ்.

கொடுக்கிற காசுக்கு குறை வைக்கவில்லை எஸ் ஏ சி! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *