செய்திகள்

சமுதாய ஏற்றத்திற்கான மாற்றத்தை வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள்

Makkal Kural Official

ஸ்டாலின் ‘ஆசிரியர் தின’ வாழ்த்து

சென்னை, செப்.5–

சமூகநீதி காத்து, சமுதாய ஏற்றத்திற்கான மாற்றத்தையும், மலர்ச்சியையும் வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டுவதோடு, அவர்களுக்கு எதிர்கால இலக்குகளையும் அடையாளம் காட்டி வெற்றித்திசையை சுட்டிக் காட்டிடும் அறிவுச்சுடர்களான ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்வி கற்றிடின் கழிந்திடும் மடமை!

கற்பதுவே உன் முதற்கடமை!

என்ற பாவேந்தரின் வார்த்தைகளைப் பசுமரத்தாணி போல மாணவர்களின் மனதில் பதியச் செய்து, பார் போற்றும் நல்லவராக, பொது நலச்சிந்தையில் புடம் போட்ட தங்கங்களாக மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்.

ஓர் ஆசிரியரின் எழுதுகோல் குனிகிற போதெல்லாம் அங்கே ஒரு தலைமுறை தழைத்தோங்கி தலை நிமிர்ந்து நிற்கும் என்பது முற்றிலும் உண்மை. சமூகநீதி காத்து, சமுதாய ஏற்றத்திற்கான மாற்றத்தையும் மலர்ச்சியையும் வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள். இத்தகைய சிறப்பான பொறுப்பினை சிரமேற்கொண்டு உளிபடாமல் துளி சிதறாமல் எதிர்கால உலகத்தைச் சிரத்தையாய்ச் செதுக்கும் ஆசிரியச் சிற்பிகளுக்கு எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாட புத்தகங்களை கடந்து…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்.

அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *