செய்திகள்

சமரச தீர்வு மையங்களின் மூலம் வழக்குகளில் எளிதாக தீர்வு பெறலாம்

சென்னை, ஏப். 20

சமரச தீர்வு மையங்களின் மூலம், எந்தவித செலவுமின்றி, 60 நாட்களுக்குள் வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரேவதி கூறி உள்ளார்.

சமரச தீர்வு மையம் (Mediation Center) என்பதன், அமைப்பு முறை, வழக்குகளை கையாளுதல், செயல்பாடுகள் குறித்து, வழக்கறிஞரும், சமரசருமான ரேவதி ஜி மோகன், மக்கள் குரல் இணைய தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:

சமரச தீர்வு மையம் ஏன்?

பொதுவாக, சொத்து தொடர்பாகவோ, குடும்ப சிக்கல்கள் தொடர்பாகவோ, வழக்கு நீதி மன்றத்துக்கு போனால், பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும். இதனால், ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் நிம்மதியை தொலைத்துவிட்டு இருக்க வேண்டி வரும். இதுபோன்ற அடிப்படைச் சிக்கல்களை களைய வேண்டும் என்ற நோக்கில், கொண்டு வரப்பட்டதுதான் (Mediation Center) சமரச தீர்வு மையம்.

சென்னையில் உயர் நீதிமன்றத்தின் கீழ், 2005 ஆம் ஆண்டு முதன்முதலாக சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டது. தற்போது, சென்னையில் 3 சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது, 151 பேர் சமரசர்களாக உள்ளனர். இதில் பணிபுரிய விரும்பும் வழக்கறிஞர்களுக்கு, 10 ஆண்டு வழக்கறிஞர் அனுபவம் இருக்க வேண்டும். மேலும், இதற்கான பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், சமசர தீர்வு மையத்தில், சமரசராக பணிபுரியலாம். தற்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. 37 சமரச மையங்களில், மொத்தம் 770 சமரசர்கள் பணி புரிகிறார்கள்.

நீதிபதிகள் சிபாரிசு

நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளில், சமரச மையம் மூலமே தீர்வை எட்ட முடியும் என்று, நீதியரசர்கள் கருதும் வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு, வழக்கின் இரண்டு தரப்பாரும் அமர்ந்து பேசி 60 நாட்களில் தீர்வு காணுவார்கள். அதிக அளவு 90 நாட்கள் வரை மட்டுமே அவகாசம் உண்டு. அதற்குள் தீர்வு காண முடியாத வழக்குகள், மீண்டும் நீதிமன்ற நடைமுறைக்கே ஒப்படைக்கப்பட்டுவிடும்.

இதற்கு, கட்டணங்கள் ஏதும் இல்லை என்பதுடன், வழக்கில் தொடர்புடைய இரண்டு தரப்பினருமே அமர்ந்து பேசவும், அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்லவும் வாய்ப்பு இருப்பதால், தீர்வுகள் விரைவாக கிட்டுகிறது. இரு தரப்புக்கும் இடையே சட்டம் தொடர்பான விவரங்களை மட்டுமே சமரசர்கள் எடுத்துச்சொல்வார்கள். இரு தரப்புக்கு இடையே தீர்வு எட்டப்பட்ட பிறகு, நீதிபதிகளிடம் தீர்வு ஒப்பந்தத்தை ஒப்படைப்போம். அதன்பிறகு, நீதிமன்றம் தீர்ப்பு அளித்து, நடைமுறை நிறைவடையும்.

ஒரு வார விழிப்புணர்வு

இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 9 ந்தேதி 14 வது ஆண்டை முன்னிட்டு ஒரு வார, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குற்ற வழக்குகள் போன்றவற்றை தவிர்த்து, மற்ற வழக்குகளை இதில் கையாளலாம். ஆண்டுக்கு ஆண்டு, சமரச மையங்களில் தீர்வுகள் எட்டப்படும் நிலை அதிகரித்து வருகிறது.

நீதி மன்றத்துக்கு செல்லாமல், நேரடியாக சமரச தீர்வு மையங்களில் வழக்குகள் எடுத்துக்கொள்ளும் நிலை, இந்தியாவில் இதுவரை நடைமுறையில் இல்லை. ஆனால், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போதுதான் தொடங்கி உள்ளது. அதன்பிறகு, வெளிநாட்டில் உள்ளதுபோல், சமரச தீர்வு மையங்களிலேயே வழக்குகளை தாக்கல் செய்து தீர்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும். இவ்வாறு ரேவதி ஜி. மோகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *