திருச்சி, ஜூலை 17–
தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வேண்டுதல் காரணமாக நடந்து சென்ற பக்தர்கள் மீது, சரக்கு லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடிபட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 25 பேர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வேண்டுதல் காரணமாக நடந்து சென்றுள்ளனர். இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் மீது மோதியது.
4 பெண்கள், ஒரு ஆண் பலி
இதில், சின்னையன் மகன் முத்துசாமி (வயது 60), கார்த்திக் மனைவி மீனா (வயது 26), முருகன் மனைவி ராணி (வயது 37), ரமேஷ் மனைவி மோகனாம்பாள் என 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதா என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்து தொடர்பாக செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அதிகாலையில் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#விபத்து #உயிரிழப்பு