செய்திகள்

சமநிலை வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி கல்வி அலுவலகம் முற்றுகை

600 இடைநிலை ஆசிரியர்கள் கைது

தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை, பிப். 19–

சமநிலை வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பள்ளி கல்வி அலுவலகம் முற்றுகையிட முயன்ற 600 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சமநிலை வேலைக்கு சம ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் முற்றுகையிட ஆசிரியர்கள் அணி அணியாக திரண்டு வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களை பள்ளி கல்வி அலுவலக வளாகத்திற்குள் நுழைய விடாமல் பிரதான கதவுகளை மூடி இருந்தனர். நூற்றுக்கணகான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.ஆனாலும் போராட்டக்காரர்கள் நுழைவு வாசலை முற்றுகையிட்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்) சார்பில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. பொதுச்செயலாளர்கள் ரங்கராஜன், முத்துச்சாமி, வின்சென்ட், பால்ராஜ், மயில், தாஸ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளுக்கு வழங்கும் உதவி போல உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *