செய்திகள்

சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்தப் பயிற்சிப் பட்டறை

அனைத்து தொகுதியிலும் பூஜ்ய கார்பன் இலக்கை எட்ட முயற்சி மேற்கொள்ளுங்கள் என அறிவுரை

சென்னை, அக். 10–

அனைத்து தொகுதியிலும் பூஜ்ய கார்பன் இலக்கை எட்ட முயற்சி மேற்கொள்ளுங்கள் என சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சிப் பட்டறையில் வலியுறுத்தப்பட்டது

சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சிவ. வீ. மெய்யநாதன் முன்னிலையில், சபாநாயகர் மு.அப்பாவு, தொடங்கி வைத்து உரையாற்றுகையில் தமிழ் நாடு அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் எவ்வாறு முன்னோடி மாநிலமாகச் செயல்படுகிறது எனவும், கட்டிட இடிமானக் கழிவுகளை எவ்வாறு மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் உரையாற்றினார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளவும், அதன் விளைவுகளை தடுக்கவும், வருங்கால சந்ததியினருக்கு ஒரு விரிவான விழிப்புணர்வு தேவை என்பதை நன்கு அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகிய இயக்கங்களை உருவாக்கியுள்ளார்.

மஞ்சப்பை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற மீண்டும்மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுப்பதற்கு இந்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

இந்தியாவிலேயே முதன் முறையாக கால நிலை மாற்றத்திற்கான தனி நிறுவனமாக தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவனம்ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் கீழ் மூன்று இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2031ம் ஆண்டுக்குள் சுமார் 265 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 3.15 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2023–2024ம் ஆண்டில் 6.44 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது, இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 1900 நாற்றங்கால்களை வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே வனத்துறையால் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான 14 ஈர நிலங்களை ராம்சார் தளங்களாக தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. மேலும் 2 ராம் சார் தளங்கள் அறிவிப்பு செய்ய அரசின் பரிசீலனையில் உள்ளது.

காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் தொடங்கி வைத்து காலநிலை மாற்றத்திற்கான சிறப்பு நிர்வாகக்குழுவினை அமைத்துள்ளார். காலநிலை மாற்ற இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டு மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காலநிலை மாற்ற இயக்க இயக்குநர்களாவும், மாவட்ட வன அலுவலர்களை மாவட்ட காலநிலை அலுவலர்களாகவும் இந்த அரசு நியமித்துள்ளது. அண்ணா பல்கலைகழக வளாகத்தில் தமிழ்நாடு அரசால் காலவடிவமைப்புமையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பசுமைபள்ளிகளாக மாற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. ‘‘பசுமைபுத்தாக்கத்திட்டத்தின்மூலம்மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் நாற்பது பசுமைதோழர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 10 கிராமங்களை காலநிலைதிறன்மிகுகிராமங்களாக மாற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில்,

காலநிலை மாற்றத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்தும், தமிழ்நாட்டின் வனப்பரப்பில் தற்போது 23% சதவிகிதமாக இருக்கும் வனப்பரப்பினை 33% சதவிகிதமாக அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ பேசுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியினை தங்களுடைய தொகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ள தொகுதியின் வனப்பரப்பை மரகதப் பூஞ்சோலைகள் மூலம் அதிகரிக்குமாறும், பல காலநிலை திறன்மிகு கிராமங்களை உருவாக்குமாறும், தங்களது தொகுதியில் நிகர பூஜ்ய கார்பன் இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் மற்றும் பல புதிய முயற்சிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்கள்.

இக்கருத்துப்பட்டறையில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், மதிவேந்தன், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீ நிவாஸ் ரெட்டி, காலநிலை மாற்ற இயக்கத்தின் தலைமை திட்ட இயக்குனர் தீபக் எஸ் பில்கி, சட்டமன்ற செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *