செய்திகள்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முதியவர்கள், குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு தனிவரிசை

தேவசம் போர்டு ஏற்பாடு

பம்பை, டிச. 15–

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் முதியவர்கள் மற்றும் குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு தனி வரிசைக்கு தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். இம்முறை கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரை கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

தினமும் சராசரியாக 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் கடந்தது. இதனால் பக்தர்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவை தவிர கேரளாவில் பல்வேறு இடங்களில் உடனடி முன்பதிவு வசதி இருப்பதால் அங்கு முன்பதிவு செய்தும் வருவதால், கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதால், முதியவர்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். நெரிசலில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் பக்தர்களை கட்டுப்படுத்தவும், உரிய வசதிகள் ஏற்படுத்தவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கவும், நிலக்கல்லில் கூடுதல் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்துவது உள்பட சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆன்லைன் தரிசன முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கப்பட்டது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *