செய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலி: மாலையில் 1 மணி நேரத்திற்கு முன்னரே நடை திறப்பு

திருவனந்தபுரம், நவ.23-

சபரிமலையில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலையில் 1 மணி நேரத்திற்கு முன்னரே நடை திறக்கப்படுகிறது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் சன்னிதானம் முதல் பம்பை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முதல் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பிறகு மாலை 4 மணிக்கு நடை திறப்பதை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கக்கப்பட்டது. கூடுதலாக 1 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது தினசரி 18 மணி நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நிமிடத்திற்கு 60 முதல் 80 பேர் வரை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

பொதுவாக கோவில் நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் நேற்று முதல் நடை அடைக்கப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18-ம் படி வழியாக ஏற அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சன்னிதானம் பகுதியில் காத்திருந்து அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த பின்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க

மேல்சாந்தி வேண்டுகோள்

சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சன்னிதானத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலை தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். இருமுடிகட்டில் கொண்டு வரும் பொருட்களை மலையில் வைத்து விட்டு செல்லக்கூடாது. புனிதமான புண்ணிய நதி பம்பையாற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலை உள்ளிட்ட பொருட்களை பம்பை ஆற்றில் வீசி எறியக்கூடாது. அதுதான் ஐதீகம் என்று நினைப்பது தவறு. பம்பை ஆற்றை சுத்தமாக வைத்திருப்பது நமது ஆன்மாவை சுத்தமாக வைத்திருப்பதற்கு சமம். சன்னிதானத்தை தூய்மையாக பாதுகாத்து, சபரிமலையை நாட்டிலேயே சிறந்த புனித இடமாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *