செய்திகள்

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு

சபரிமலை, டிச.26–-

சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடக்கிறது. இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16–-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர்.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருந்தது. இதுபோக நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

ஒரு கட்டத்தில் பம்பை முதல் சன்னிதானம் வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறு குழந்தைகள், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதற்கிடையே நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973–-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜைக்கு முதல் நாள் அதாவது இன்று (26-ந் தேதி) மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு கடந்த 23–-ந் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

அப்போது 18-–ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். பின்னர் 18–-ம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.

பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். இதனால் தங்க அங்கியை சன்னிதானத்துக்கு கொண்டு வருவதையொட்டி இன்று பிற்பகலில் 18–-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30–-ந் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14–-ந் தேதி நடைபெறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *