நாளிதழுக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்
சென்னை, ஆக. 31–
காலை உணவு திட்டம் குறித்த தினமலர் செய்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வைத்தார். 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் இதன் மூலம் பயன்படுகிறார்கள். இது மாற்றுக்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது. கிராமப்புற பள்ளிகளில் 30 சதவீத மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் கலை உணவு சாப்பிடாவிட்டால், கவனச்சிதறல், நினைவாற்றல், பகுத்தறியும் ஆற்றல் குறைகிறது என்ற ஆய்வு முடிவுகளை எடுத்துக்காட்டி, இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்கிறார்கள்.
இந்த சூழலில் தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு, “டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கண்டனம்
இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:–
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! என்று முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.