புதுடெல்லி, ஆக.23–-
‘சந்திரயான்–-3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விருது வழங்கினார். தஞ்சையைச் சேர்ந்த மற்றொரு தமிழக விஞ்ஞானிக்கு ‘விஞ்ஞான ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
சிறந்த விஞ்ஞானிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தேசிய விஞ்ஞான விருதுகளின் முதல் கட்ட விருது விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் காந்தந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று 33 விருதுகளை வழங்கினார்.
விருதுகள் விஞ்ஞான ரத்னா, விஞ்ஞான ஸ்ரீ, விஞ்ஞான யுவா, விஞ்ஞானிகள் குழு ஆகிய 4 பிரிவுகளில் வழங்கப்பட்டன. விஞ்ஞான ரத்னா விருது வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக வழங்கப்படுகிறது.
இந்த விருதை மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரிதொழில்நுட்பவியல் ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்கும் கோவிந்தராஜன் பத்மநாபன் பெற்றார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குனரான இவர் தமிழ்நாட்டின் தஞ்சையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரமுத்துவேல்
இதைப்போல சிறந்த விஞ்ஞானிகள் குழுவாக ‘சந்திரயான்–-3’ திட்டத்தின் குழு தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ‘சந்திரயான்–-3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பெற்றுக்கொண்டார்.
மற்ற 2 விருதுகளில் விஞ்ஞான ஸ்ரீ விருது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. விஞ்ஞான யுவா விருது இந்திய பெருங்கடல் வெப்பமயமாதல் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய ஆய்வுக்காக வழங்கப்பட்டது. விஞ்ஞானஸ்ரீ விருதை 13 பேரும், விஞ்ஞான யுவா விருதை 18 பேரும் பெற்றனர்.