செய்திகள்

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்: கிங் மேக்கர், கிங் ஆக வாய்ப்பு?

Makkal Kural Official

விசாகப்படிடனம், ஜூன் 4–

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் 16 இடங்களை பெற்றுள்ளதால், கிங் மேக்கராக ஆவார் என்று கூறப்படும் நிலையில், நிதிஷ் குமார் கட்சியும் 15 இடங்களில் வென்றுள்ளதால், அவருக்கும் அந்த வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு அரசியல் வாழ்க்கை 1970 களில் தொடங்கியது. அவர் முதலில் காங்கிரஸ் கட்சியிலேயே தனது அரசியலைத் தொடங்கினார். 1978ஆம் ஆண்டில், அவர் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் வென்றார். 1980 முதல் 1982 வரை ஆந்திர அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார்.

இதையடுத்து தனது மாமனார் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியிலேயே இணைந்தார். அங்கு சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் என்டிஆரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. குறிப்பாக 1984இல் என்டிஆரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் காங்கிரஸ் முயன்ற நிலையில், அதை முறியடிக்கப் பெரியளவில் சந்திரபாபு நாயுடு உதவினார். அதன் பின்னரே அவர் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளராக ஆனார்.

1995ஆம் ஆண்டில் என்டிஆருக்கு எதிராகவே தனது 45 வயதில் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து 1999இல் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் வென்று அவர் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து 2004இல் ஆட்சியை இழந்த அவர் 2014 வரை எதிர்க்கட்சி வரையிலேயே இருக்க வேண்டி இருந்தது. 2014இல் தான் அவர் மீண்டும் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார்.

கிங் மேக்கர், கிங்

2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டார். இருப்பினும், 5 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் வெற்றியைக் பெற்றுள்ளார். 1996-2004 காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு தேசிய அரசியலிலும் கிங் மேக்கராக இருந்து இருந்தார். இப்போதைய சூழலில் தேசியளவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் வெறுமனே 235 தொகுதிகளில் மட்டுமே தனியாக பெற்றுள்ள நிலையில், அதே கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களை பெற்றுள்ளது. எனவே, காங்கிரஸ், பாஜக ஆகிய 2 கட்சிகளும் அவரிடம் பேசி வருகின்றன.

அதேபோல, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முதன்மையாக இருந்தார். ஆனால், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத காரணத்தால், அங்கிருந்து மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார். இந்நிலையில் அவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி 15 இடங்களை பெற்றுள்ளது. எனவே, அவருக்கு இந்தியா கூட்டணியில் முதன்மை இடம் கிடைக்கும் என்றால், அங்கு திரும்பவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

எனவே, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகிய இருவரும் தேசிய அரசியலில் கவனம் செலுத்தினால், கிங் மேக்கராகவோ அல்லது கிங்காகவோ வாய்ப்பிருக்கிறது என்பது தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *