செய்திகள்

சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு

Makkal Kural Official

மதுரை, செப். 28–

சந்திரபாப நாயுடுவுக்கு பக்தி கிடையாது, அரசியல் சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது:–

“உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் சந்திரபாபு நாயுடு ஒரு திட்டமும் செய்யவில்லை. சந்திரபாபு நாயுடு தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ஆட்சி காலம் முடிந்துள்ளது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய் வந்தது, அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது, 4 லாரி நெய் வனஸ்பதி கலந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்திரபாபுவின் சுயநலம்

ஜெகன் மோகனை அரசியல் ரீதியாகப் பூஜ்யமாக்கவே சந்திரபாபு நாயுடு இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கு பக்தி இல்லை, கடவுளைத் தனது சுய நலத்துக்காகப் பயன்படுத்துகிறார். சந்திரபாபு நாயுடு தனது கட்சி அலுவலகத்திலிருந்து பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. லட்டு விவாகரத்தில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்காமல், சந்திரபாபு நாயுடு நாடகம் ஆடி வருகிறார்.

மதத்தை வைத்துச் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்து வருகிறார். மத்தியில் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு நடத்தும் எந்தவொரு விசாரணையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். திருப்பதி தேவஸ்தான லட்டுவில் எந்தவொரு கலப்படமும் கலக்கவில்லை, சந்திரபாபு நாயுடு அரசியலுக்காகக் கடவுளை ரோட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

லட்டுவில் கலப்படம் கலந்து உள்ளதா? இல்லையா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிகக் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். சந்திரபாபு நாயுடு முடிந்தால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் ராஜினாமா செய்ய விட்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். துணை முதல்வர் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுத்ததை பேசி வருகிறார்” என்றும் குற்றம் சாட்டினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *