சென்னை, மே 15–
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘‘டிடி நெக்ஸ்ட் லெவல்’’ திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்தில் திருப்பதி ஏழுமலையான் பாடலை கிண்டல் செய்யும் விதமாக கிஸ்ஸா பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் தொடர்பான பாடலை தவறாக சித்தரித்து உருவாக்கவில்லை என்றும் தானும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லும் பக்தன் தான் என சந்தானம் பேசியிருந்தார். ஆனால், பாடலை நீக்கவில்லை என்றால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என மான நஷ்ட வழக்கை போட்ட நிலையில், தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியானது.
நடிகர் கூல் சுரேஷ் பவன் கல்யாண் காலில் கூட விழுகிறேன், சந்தானம் படத்தை தடை செய்ய வேண்டாம் என நேற்று நடைபெற்ற பட விழாவில் பகிரங்கமாக கீழே விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழு பாடலை நீக்கியுள்ளது. சர்ச்சை பாடல் நீக்கம்: “கோவிந்தா கோவிந்தா” என்கிற வரிகள் இடம்பெற்ற கிஸ்ஸா பாடல் ஏழுமலையான் பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கி மீண்டும் மறு தணிக்கையை படக்குழு பெற்றுள்ளது. நாளை வெளியாகும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் அந்த பாடல் இடம்பெறாது என படக்குழு உறுதியளித்துள்ளது.
திரைப்படம்
வெளியிட தடையில்லை
இதற்கிடையில் கோவிந்தா, கோவிந்தா பாடலுடன் படத்தை வெளியிட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சர்ச்சை பாடல் வரிகள் நீக்கப்பட்டதாகவும், டியூன் மியூட் செய்து விட்டதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் தகவல் அளித்தது. படத்தயாரிப்பு நிறுவன தகவலை அடுத்து திரைப்படத்தை வெளியிட தடையில்லை என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த படம் நாளை வெளிவருவதில் சிக்கல் தீர்ந்தது.