செய்திகள் நாடும் நடப்பும்

சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

Makkal Kural Official

புட்டபர்த்தி, நவ. 19:

புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.

சாய்பாபாவின் நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார்.

புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்களாக மாறினார்கள்.

புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் 13ம் தேதி தொடங்கியது. 24–ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. இதில் உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

பிரசாந்தி நிலையத்தில்…

இந்த நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை புட்டபர்த்தி வந்தார்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்ற பிரதமர் மோடி, மகா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.

முதலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.

சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த விழாவில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *