செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 3 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்

ராய்பூர், ஜன. 31–

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா – பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2021–ல் நடந்த தாக்குதலில் 23 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி 26–ந்தேதி சுக்மா – பிஜாபூர் பகுதியில் முதன்முறையாக குடியரசு தின விழாவை ஒட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த அப்பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ஜோனாகுடா – அலிகுடா பகுதியில் கோப்ரா படையினர், சிஆர்பிஎப் சிறப்பு அதிரடிப் படையினர் கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள். உயிரிழந்த தேவன், பவன் குமார், லம்ப்தார் சின்ஹா ஆகியோரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *