ராய்ப்பூர், மார்ச் 27–
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு பெண் கேடர் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பாசகுடா காவல் நிலைய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பாகா கிராமங்களின் காடுகளில், பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் என்கவுன்டரில் ஒரு பெண் கேடர் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் பி விளக்கமளித்துள்ளார்.
தொடரும் தேர்தல் பணி
மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் அதன் எலைட் யூனிட் கோப்ரா (கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன்) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த என்கவுண்டரில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 6 நக்சலைட்டுகளின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டடுள்ளன. இருப்பினும், அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் சூழலில், நடைபெற்றுள்ள என்கவுண்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.