செய்திகள்

சட்ட விரோதமாக தாது மணல் எடுத்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, பிப். 17–

சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து உள்ளன.

கடந்த 2012 முதல் 2013 வரை, அதிக அளவில் தாது மணல், சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சென்னை ஐகோர்ட் தானாக முன் வந்து விசாரித்தது. அதன் தொடர்ச்சியாக, 2013 முதல் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டது. சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு உதவ, வழக்கறிஞர் சுரேஷ் நியமிக்கப்பட்டார். இக்குழு பல்வேறு கட்டமாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை அளித்தது.

இந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜோதிராமன் தீர்ப்பு வழங்கினர். ‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யும் விதித்த தடை செல்லும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சிறப்பு அதிகாரிகளை நியமித்து வழக்கை சி.பி.ஐ., கண்காணிக்க வேண்டும். தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை 4 வாரங்களுக்குள் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும். சில தவறுகள் கூட சமுதாயத்தை அரித்து விடும். அதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. தாது மணலை கைப்பற்றி, குடோன்களுக்கு சீல் வைக்க வேண்டும். ரூ.5,832 கோடியை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, சட்டவிரோத தாது மணல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *