செய்திகள்

சட்டவிரோத பணபரிமாற்றம்:- சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, ஆக. 5–

சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று மற்ற மாநிலங்களிலும் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 47 இடங்களை குறிவைத்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மண்டல அதிகாரிகளின் துணையுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். யார்-யாருடைய வீடுகளில் சோதனை நடைபெறுகிறது என்கிற தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என்றும் அதன் பின்னரே அது தொடர்பாக விரிவான தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.