செய்திகள்

சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுமா? ஸ்டாலின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

Spread the love

சென்னை, ஜூலை 20

சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுமா என்ற ஸ்டாலின் கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அவையின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் இன்னும் முடிவெடுக்கவில்லை. அவர்களின் விடுதலை கேள்வி குறியாக உள்ளது என்றார்.

அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறியதாவது:

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 வது சட்டமன்ற கூட்டத்தொடரிலிருந்து நேற்றைய கூட்டம் வரை ஊடகங்களுக்கு சட்டசபை நிகழ்ச்சிகள் தொடர்பான ஒளிப்பதிவுகள் 49.50 மணி நேரம் அதாவது 50 மணி நேரம் காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டமன்ற நிகழ்வுகளின் சரிபாதி ஒளிப்பதிவு காட்சிகள். மேலும் சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். உங்கள் ஆட்சியில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என தீர்மானம் போட்டீர்கள். ஆனால் மற்ற 6 பேர் பற்றி கவலைப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் தான் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்ற அனுப்பப்பட்டது.

7 பேர் விடுதலை தொடர்பாக தற்போது கவர்னரின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது. அது குறித்து அவர் முடிவு செய்வார். அதேபோல் இலங்கை போர் தொடர்பாகவும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை சர்வதேச குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அவருடைய துணிச்சல், யாருக்கும் இருந்ததில்லை. இதுவரை ஆட்சியில் இருந்த யாருக்கும் இருந்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *