செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு

சென்னை, மார்ச்.18-

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முன்வரவில்லை.

கடந்த 13 மற்றும் 14–ந்தேதி விடுமுறை என்பதால், மார்ச் 15–ந்தேதி அண்ணா தி.மு.க., தி.மு.க., அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அண்ணா தி.மு.க. வேட்பாளர்களும் அவர்களது தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலி்ன், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமமுகவை சேர்ந்த டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமலஹாசன் ஆகியோரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் 4ம் நாளான நேற்று பெரம்பூர் தொகுதி அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் ஆதிராஜாராம் (கொளத்தூர்), ஆர்.நட்ராஜ் (மயிலாப்பூர்), பி.சத்யநாராயணன் (தியாகராயநகர்), பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் (துறைமுகம்), பா.ம.க. வேட்பாளர் கசாலி (சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி) ஆகிய அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர். நேற்று வரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஆண்கள் சார்பில் 1,755 மனுக்களும், பெண்கள் சார்பில் 362 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் மனு அளித்துள்ளனர்.

இதேபோல 5வது நாளான இன்றும் தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. நாளை மறுதினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். இதைத்தொடர்ந்து தகுதியுடைய வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும். வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் தங்களுடைய மனுவை திரும்ப பெறுவதற்கு 22-ந்தேதி கடைசிநாள் ஆகும்.

அதன்பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *