செய்திகள்

சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Makkal Kural Official

தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை

சென்னை, ஜன. 6-

சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இந்த நிலையில் சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசின் சாதனைகளை வாசிக்க மனமில்லாமல், ஒரு நாடகத்தை கவர்னர் அரங்கேற்றி உள்ளார். கவர்னர் உரையை வாசித்தால் அரசின் சாதனைகளை அடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர் புறக்கணித்துவிட்டார். நாட்டுப்பற்றுக்கு அவர்கள்தான் குத்தகைதாரர்கள் என்பதுபோல் நடந்து கொள்கின்றனர். தேசப்பற்று குறித்து எங்கள் தலைவர்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி ஆளுநருக்கு இல்லை. ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. பதவிக்காலம் முடிந்தும் அதில் ஒட்டிக்கொண்டு இருப்பது அவருக்கு அழகில்லை. தேசத்திற்காக உயிரை அர்ப்பணித்த தலைவர்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். சுதந்திர போராட்டத்தில் முன்னின்றவர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.

தமிழக சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் பெரியவர் என்ற மனநிலையில் கவர்னர் செயல்படுகிறார். தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார். சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும். தேசிய கீதம் பாடும்வரை காத்திருக்காமல், தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் ஆர்.என்.ரவிதான்.

அரசின் சாதனைகளை, திட்டங்களை உரையாக தயாரிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் சாதனைகளை படிக்க வேண்டும் என்பதால் உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்கவே கவர்னர் வெளியேறினார்

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *