செய்திகள்

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க போலீஸ் மீதே வழக்கு தொடுப்பதா?

மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதித்த நீதிபதி

சென்னை, நவ. 24–

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக காவல்துறையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது எனவும், எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உண்மை அறியவேண்டும்

வழக்கு காரணமாக காவல்துறை தங்கள் சட்டபூர்வமான கடமையை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போகிறது. காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தன்மை குறித்து விசாரித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலம் கூறும்போது, சட்டம் – ஒழுங்கு பராமரிக்கும் போது ஏராளமான பிரச்னைகளை சந்திக்கும் காவல்துறையினர், தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அதனை தள்ளுபடி செய்ததுடன், ஏழு காவல்துறையினருக்கும் தலா ஐந்து ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக வழங்கவும் மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

இந்த அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயை காவல்துறை ஆணையரிடம் நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் அதனை காவல்துறை ஆணையர் சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *