செய்திகள்

சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

Makkal Kural Official

ராஞ்சி, அக். 23–

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் அதற்குள் அங்கு புதிய அரசு தேர்வு செய்யப்படுவது அவசியம் என்பதால் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 35 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அம்மாநில முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியிலும், அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஹேமந்த் சோரன் சகோதரர் பசந்த் சோரன் தும்காவிலும், ஜார்க்கண்ட் சட்டமன்ற சபாநாயகர் ரவீந்திரநாத் மஹ்தோ நாலாவிலும், அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர் கர்வாவிலும், சோனு சுதிவ்யா கிரிதியிலும், பெபி தேவி டும்ரியிலும் போட்டியிடுகிறார்கள்.

ஹேமந்த் சோரன் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார். அவர் 2019 சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியாளரான சைமன் மால்டோவைவிட 25,740 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். அவரது மனைவி கல்பனா சோரன், காண்டே இடைத்தேர்தலில் பாஜகவின் திலீப் குமார் வர்மாவைவிட 27,149 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *