செய்திகள்

‘சட்டசபை தேர்தலில் வெற்றிக்கு தயாராக வேண்டும்:’ தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

தே.மு.தி.க. 16ம் ஆண்டு விழா

‘சட்டசபை தேர்தலில் வெற்றிக்கு தயாராக வேண்டும்:’

தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை, செப். 14

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க) 16-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. சட்டசபை தேர்தலில் கட்சி அபரிமிதமான வாக்குகளுடன் வெற்றி பெற தயாராக வேண்டும் என்று தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இது சம்பந்தமாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி, தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தே.மு.தி.க. தற்போது 16-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. கட்சி, தமிழக மக்களிடத்தில் பட்டிதொட்டி எங்கும் அனைத்து இடங்களிலும் வேறூன்றி தழைத்தோங்கி மக்கள் ஆதரவோடு வளர்ந்து வருகிறது. வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்றதை கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம்.

இந்த ஆண்டு 16-ம் ஆண்டு தொடக்க விழா, மக்களுக்கு பயன்படும் வகையில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உற்சாகம் அளிக்கின்ற வகையில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அடுத்த (2021) ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. ஒரு அபரிமிதமான வெற்றி பெற்று மக்கள் சேவை ஆற்ற நாம் தயாராக வேண்டும்.

நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற தாரகமந்திரத்தின் படி கட்சி தொடக்க நாளை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *