செய்திகள்

சட்டசபை கூடுகிறது: நாளை தமிழக பட்ஜெட்

சென்னை, மார்ச் 17–

தமிழக சட்டசபை நாளை காலை கூடுகிறது. முதல் நாளிலேயே தமிழக பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது.

கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், தி.மு.க. ஆட்சியில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன், தனது 2வது பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். தொடுதிரை உதவியுடன் கணினி முறையில் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. சட்டசபை கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கேள்வி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகும். படிப்படியாக பேரவையின் அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.

வேளாண்மை பட்ஜெட்

நாளை மறுநாள் வேளாண்மை பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பொது மக்கள், விவசாயிகள், வேளாண் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு வேளாண் பட்ஜெட் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2022–2023ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை, 2021–2022ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கைகள் ஆகியன நிதியமைச்சரால் வரும் 24ந் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளன. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது அலுவல் ஆய்வுக் குழுவின் ஆலோசித்து தெரிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.