போஸ்டர் செய்தி

சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை, ஜூலை.20-

சட்டசபையில் தியாகி எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

சென்னையில் வன்னியர் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த ஆண்டு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதன்படி சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து பேசியதாவது:-

‘‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 

இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”

என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, வாழும்போதே வரலாறாக வாழ்ந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சியாரின் முழு திருஉருவப் படத்தை, வரலாற்று சிறப்புமிக்க நம்முடைய சட்டமன்றத்தில் திறந்து வைக்கும் இந்த விழாவில், பங்கேற்பதை நான் பெருமையாக கருதுகிறேன், நமது சட்டப் பேரவை வரலாற்றில் இது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.

நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்த நல்லவர்களை சிறப்பிப்பதில், மரியாதை செலுத்துவதில், அம்மாவும், அம்மாவின் அரசும் முன்மாதிரியாக திகழ்கிறது. அந்த வகையில், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ராமசாமி படையாச்சியாரின் தன்னலமற்ற உழைப்பை பெருமைப்படுத்தவும், அவரின் நினைவை சரித்திரம் போற்றும் வகையிலும், அவரின் முழு உருவப் படத்தை இம்மாமன்றத்தில் நிறுவுவதில் அம்மாவின் அரசு பெருமைப்படுகிறது.

தியாக சீலர்களில் ஒருவராக திகழ்ந்தவர்

இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றால், அந்த வளர்ச்சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப் போராட்டத் தலைவர்களின் தியாகங்கள் தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட தியாக சீலர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தான் ராமசாமி படையாச்சியார்.

1952ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை தோற்றுவித்து, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராமசாமி படையாச்சியார் உட்பட உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த 19 வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை தேர்தலிலும், இக்கட்சியை சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மக்கள் பணியாற்றுவதில் மற்ற தலைவர்களுடன் இணக்கமாக பணியாற்ற ராமசாமி படையாச்சியார் தயங்கியதில்லை.

1954ம் ஆண்டு பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் ராமசாமி படையாச்சியார் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். அதன் பின்னர் 1980 மற்றும் 1984ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவை உருவாக்க…

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்ட தலைவர்களில் முதல்வரிசை தலைவராக திகழ்ந்தவர் ராமசாமி படையாச்சியார். மிகவும் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தவர் ராமாசாமி படையாச்சியார். குறிப்பாக, வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவீத ஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றிய முதல் தலைவர் இவர்தான்.

தீர்மானம் நிறைவேற்றியது முக்கியமல்ல. அந்த தீர்மானம் வெற்றி பெற தொடர் முயற்சி மேற்கொள்வதில் தான் அந்த தீர்மானத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தவர் ராமசாமி படையாச்சியார்.

பின்தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அந்த உன்னத தலைவர் இந்த நாட்டில் பிறந்ததும், வாழ்ந்ததும் நாம் செய்த பாக்கியம் என்பதால், அவர் பிறந்த நாளான செப்டம்பர் 16ம் நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 29.6.2018 அன்று நான் சட்டமன்றத்தில் அறிவித்தேன்.

மஞ்சக்குப்பத்தில் நினைவு மண்டபம்

மேலும், ராமசாமி படையாச்சியார் பிறந்த கடலூர் மாவட்டத்தில், அரசு சார்பாக நினைவு மண்டபமும், அதில் அவருடைய ஒரு முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்க வேண்டும் என்று வன்னியர்குல பெருமக்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அதனை முழு மனதாக ஏற்று, 19.7.2018 அன்று மேட்டூரில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபமும். முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்படும் என்று நான் உறுதியளித்தேன்.

வாக்குறுதி கொடுத்ததோடு நிற்காமல், அதனை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி, அண்ணா தி.மு.க.வின் ஆட்சி தான் என்பதை அம்மா பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர்களிடம் குருகுல பயிற்சி பெற்ற நாங்களும், சொன்னதை செய்வோம்! சொல்லாததையும் செய்வோம்!” என்ற கொள்கையின் அடிப்படையில், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1.5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கி, அதில் நினைவு மண்டபமும், திருஉருவ வெண்கலச் சிலையும் அமைக்க 14.9.2018 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இம்மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரோட்டமுள்ள இந்த ஓவியம், ராமசாமி படையாச்சியாரின் கம்பீரம், கண்ணியம் மற்றும் ஆளுமையை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றது. இந்த ஓவியத்தைத் தீட்டிய ஓவியரை நான் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக சபாநாயகர் ப.தனபால் பேசும்போது, “ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்பட திறப்பு விழா சிறப்பாக நடைபெறுகிறது. ராமசாமி படையாச்சியாரை அறியாத அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. தன்னுடைய அப்பழுக்கற்ற பொதுப் பணியாலும், அனைவரிடமும் அன்போடு பழகும் தன்மையாலும், அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும்படி வாழ்ந்து காட்டிய மாமனிதர்” என்றார்.

முடிவில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

ஓவியருக்கு நினைவு பரிசு

விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், பா.ம.க. இளைஞரணி அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பொன்னையன் மற்றும் ராமசாமி படையாச்சியார் மகன் டாக்டர் ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டசபையில் ஜெயலலிதா படத்துக்கு நேர் எதிரே ராமசாமி படையாச்சியார் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கீழே ‘வீரம், தீரம், தியாகம்’ என்று எழுதப்பட்டு உள்ளது. அவரது படத்தை வரைந்த சென்னை கவின் கலைக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான ஓவியர் மதியழகனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *