சபாநாயகர் அப்பாவு உத்தரவு
சென்னை, ஜூன் 26–
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அண்ணா தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து அண்ணா தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளின் போது, சட்டசபைக்கு தொடர்ந்து கருப்புச் சட்டையில் அண்ணா தி.மு.க.வினர் வந்தனர்.
சட்டசபை தொடங்கியதுமே இன்றும் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன். கேள்வி நேரத்துக்கு பின் பேச அனுமதி தருகிறேன் என்று கூறினார்.
இதற்கு பின்பும் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து அவை காவலர்கள் அண்ணா தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:–
ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தாலும் அண்ணா தி.மு.க.வினர் பேச தயாராக இல்லை. சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை.
சட்டசபை மரபு மற்றும் விதிப்படி அண்ணா தி.மு.க.வினர் நடந்து கொள்ளவில்லை. அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்படுகின்றனர்.
சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். சட்டசபை விதிகளின்படி சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதனிடையே அவை முன்னவர் துரைமுருகன் அண்ணா தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார். அப்போது பேசிய துரைமுருகன், “பிரச்சினையை சட்டசபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி உள்ளோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அண்ணா தி.மு.க.வினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” என்றார்.இதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விளம்பர நோக்கோடு அண்ணா தி.மு.க. செயல்படுகிறது. வீண் விளம்பரம் தேடுவதில் தான் அண்ணா தி.மு.க.வினர் முனைப்பாக உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது. மக்கள் பிரச்சினையை அவையில் பேச வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறியும் ஏற்க மனமில்லாமல், அண்ணா தி.மு.க. வெளியில் சென்று பேசுவது சட்டசபை மாண்பல்ல.” என்று குறிப்பிட்டார்.