செய்திகள்

சட்டசபையில் இன்று புதிய திட்டப்பணிகளுக்காக ரூ.3534 கோடி நிதி ஒதுக்கீடு

Makkal Kural Official

முதல்‌ துணை மதிப்பீடு நிறைவேற்றம்

சென்னை, டிச.9–

நடப்பு 2024–-25–ம்‌ ஆண்டுக்கு புதிய திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்காக ரூ.3534 கோடியே 5 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் முதல்‌ துணை மதிப்பீடு மானியம் வழங்கக் கோரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் 2 நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாடு அரசின்‌ நிதி மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு 2024–25–ம்‌ ஆண்டிற்கான முதல்‌ துணை மதிப்பீடுகளை, 2024–ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 9–ம்‌ நாளன்று சட்டமன்றப்‌ பேரவை முன்‌ வைத்து உரை ஆற்றுகையில் கூறியதாவது:–

1. 2024–-25–ம்‌ ஆண்டிற்கான முதல்‌ துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின்‌ முன்‌ வைக்க விழைகிறேன்‌. துணை மானியக்‌ கோரிக்கைகளை விளக்கிக்‌ கூறும்‌ விரிவான ஒரு அறிக்கை இம்மாமன்றத்தில்‌ வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள்‌, மொத்தம்‌ 3,534.05 கோடி ரூபாய்‌ நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.

2. 2024–-25–ம்‌ ஆண்டிற்கான வரவு -செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட பிறகு புதுப்‌ பணிகள்‌ மற்றும்‌ புது துணைப்பணிகள்‌ குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப்‌ பேரவையின்‌ ஒப்புதலைப்‌ பெறுவதும்‌, எதிர்பாராச்‌ செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும்‌ இத்துணை மானியக்‌ கோரிக்கையின்‌ நோக்கமாகும்‌.

3. தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்திற்கு, ஒன்றிய அரசு வகுத்துள்ள வரைமுறைகளின்படி மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்‌ 0.50 சதவீதம்‌ கூடுதல்‌ கடன்‌ பெறும்‌ செயல்திறனுடன்‌ இணைக்கப்பட்டுள்ள மின்துறை சீர்திருத்தத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி 1,634.86 கோடி ரூபாயை கூடுதல்‌ நிதி இழப்பீட்டு மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில்‌ 1,500 கோடி ரூபாய்‌ “மானியக்‌ கோரிக்கை எண்‌.14 – எரிசக்தித்‌ துறை” என்பதன்‌ கீழ்‌ சேர்க்கப்பட்டுள்ளது. மீதத்‌ தொகை மானியத்தில்‌ ஏற்படும்‌ சேமிப்பிலிருந்து மறுநிதியொதுக்கத்தின்‌ மூலம்‌ செலவிடப்படும்‌.

4. அரசு போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும்‌ விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியப்‌ பணப்பலன்களை வழங்கிட, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு 372.06 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை மதிப்பீடுகளில்‌ “மானியக்‌ கோரிக்கை எண்‌.48 – டேபோக்குவரத்துத்‌ துறை” என்பதன்‌ கீழ்‌ சேர்க்கப்பட்டுள்ளது.

5, தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதியச்‌ சட்டம்‌, 1954, 2024–ம்‌ ஆண்டு சட்டம்‌ எண்‌.6 மூலம்‌ திருத்தம்‌ செய்யப்பட்டு, எதிர்பாரா செலவு நிதி 150 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டைப்‌ பெறுவதற்காக, துணை மதிப்பீடுகளில்‌ 350 கோடி ரூபாய்‌ “மானியக்‌ கோரிக்கை எண்‌:.16. நிதித்‌ துறை என்பதன்‌ கீழ்‌ சேர்க்கப்பட்டுள்ளது.

6. பால்‌ உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்‌ பொருட்டு, தமிழ்நாடு பால்‌ உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு இணையத்திற்கு 70 கோடி ரூபாயை மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை மதிப்பீடுகளில்‌ “மானியக்‌ கோரிக்கை எண்‌.8 பால்வளம்‌ (கால்நடை பராமரிப்பு, பால்வளம்‌, மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை)” என்பதன்‌ கீழ்‌ சேர்க்கப்பட்டுள்ளது.

7. 2024–25–ம்‌ ஆண்டிற்கான முதல்‌ துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம்‌ ஏற்று இசைவளிக்க வேண்டுகிறேன்‌.

இவ்வாறு தங்கம்‌ தென்னரசு கூறினார்.

இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்று முடிந்ததும் இது நிறைவேற்றப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *