சென்னை, ஜன. 11–
சட்டசபையிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று 3வது நாளாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறிவிட்டு, சாலிகிராமத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார்.
இந்நிலையில், சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அண்ணா தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது.
தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் 2 நாட்களுக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்று கூறினார்.