சிறுகதை

சங்ககாலக் காதல்! – இரா.இரவிக்குமார்

“என்னங்க, ஏன் இப்படி ஒரு திடீர் முடிவு? அந்தப் பையன் அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு இருக்கான். மாதம் பிறந்ததும் வாடகையை ஒழுங்கா தர்றான். அவனை எதுக்கு உடனே காலி பண்ணச் சொல்லப் போறீங்க?”

“சரி, அவன் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிறது எனக்கும் தெரியும்! ஆனா நம்ம பொண்ணு அவன்கிட்ட எப்படிப் பழகுறாள்?”

“பழகுறதா, அவளும் குனிஞ்ச தலை நிமிராம அவன் இருக்கிற பக்கமே போறதில்லை! இவ்வளவு ஏன் போன வாரம் பெருமாள் கோயில் உற்சவர் உலா வந்தபோது கூட இவள் நம்ம அர்ச்சனைக் கூடையையும் அவன் தன் அர்ச்சனைத் தட்டையும் ஆராதனைக்குக் கொடுத்து வழிபட்டாங்களே அப்ப கூட ஒருத்தரை ஒருத்தர் ஏறெடுத்தும் பார்க்கலை! நான் அதை நல்லா கவனிச்சேன்!”

“நீ பெத்தவள் அவங்களை அப்படித்தான் கண்காணிப்பேன்னு அவங்களுக்கும் நல்லா தெரியும்!”

“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியலீங்க!”

“அதாண்டி இதெல்லாம் தெரியவும் புரியவும் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கணும்!”

“ஓ! ஐயா அவர்கள் தமிழாசிரியர்னு சொல்லிக் காட்டுறீங்களோ?”

“ஆமாண்டி ஆனால் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருக்கும் அந்தப் பையன் நான் தமிழாசிரியரா இருந்தவங்கறதை மறந்துட்டான்னு நினைக்கிறேன்!”

“இன்னைக்கு என்ன ஆச்சுது. உங்களுக்கு ஒரேயடியாய் எல்லாத்தையும் குழப்புறீங்க?”

இப்போதுதான் தன் மனதில் உள்ளதை எல்லாம் தன் மனைவி சுமதியிடம் கோர்வையாகவும் தெளிவாகவும் ஆதாரத்துடன் சொல்ல முடிவு கட்டினார் குமரேசன்.

“முதலில் உன் மகளோட தமிழறிவு, புலமை என்னன்னு உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லு!”

“நீங்க தமிழ் சொல்லிக் கொடுத்ததால அவளுக்கு அதில் ஓரளவு பயிற்சி இருந்தது. ஆனால் உங்களை மாதிரி எல்லாம் புலமை கிடையாது!” என்றாள் சுமதி. தன் மனைவியின் பாராட்டால் சற்றே மனம் மகிழ்ந்த குமரேசன்,

“அப்படிச் சொல்லடி என் தங்கம்! அவள் படிச்சது ஆங்கில மொழிக்கல்வி வழியில் நீயும் அதைத்தான் விரும்பினே!”

“ஆமாங்க, அதுக்கு என்ன இப்போ?”

“ஆனா அப்பத் தமிழில் நாட்டமில்லாத நம்ம பொண்ணு இப்ப தான் படிக்கும் கல்லூரியில் நடத்தும் தமிழ்க்கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி எல்லாவற்றிலும் முதலா வர்றாளே எப்படி? பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வாங்கி வெற்றி பெறுவது எப்படி? என்னிடம் அவள் எந்த உதவியும் கேட்டதில்லை! திடீரென்று இந்தத் தமிழ்ப் புலமையும் ஆர்வமும் வெற்றியும் எங்கிருந்து வந்தன?”

அவரின் கேள்விகளால் சுமதி மனதில் பொறி ஒன்று தோன்றி மறைந்தது!

“அப்ப இந்தப் பையன்தான் அவற்றிற்குக் காரணமா?”

“இப்பப் புரியுதா?”

“அவங்க நம்ம முன்னால ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொள்ளாதது மாதிரி இருப்பது எல்லாம் நடிப்பா?”

“அப்பாடி , நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன்… உனக்கும் புரிந்ததே!”

“ஆமா, இதில சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் தெரிஞ்சாதான் இவங்க பண்ற காரியம் புரியும்னு சொன்னீங்களே. அது எங்கே இங்க வந்தது?”

“இதைத்தான் திருவள்ளுவர் ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள’ என்று அற்புதமாகச் சொல்லியிருக்கார்!”

“ஏங்க, அதோட முழு அர்த்தம் என்னங்க?”

“உண்மையான காதலர்கள் மற்றவர்கள் முன்னால் தாங்கள் அந்நியர்களைப் போல் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாதது மாதிரி இருப்பார்களாம்! அப்படி நடிப்பதுதான் காதலர் கண்களுக்கே உரித்தான தனித் திறமையாம்!”

“எல்லாம் சரிங்க! அவங்க காதலிக்கிறதும் காதலர்கள் என்பதையும் நீங்க உங்க தமிழறிவால் கண்டுபிடிச்சிட்டீங்க! அதையே ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; அருந்தவ முனிவரும் நோக்கினார்’னு கண்டறிந்து அதை நல்லவிதமாக நாம எடுத்துக் கொண்டு அவங்க காதலுக்குப் பச்சைக் கொடி காட்டி அந்த உங்களை மாதிரி தமிழ்ப்புலமையுள்ள நல்ல பையனின் அப்பா, அம்மாவிடம் நாம் கல்யாணத்தைப் பற்றிப் பேசலாமே!” என்ற தன் மனைவியின் கருத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார் குமரேசன்.

தன் மனைவியின் தமிழ் இலக்கிய அறிவையும் அதில் காதலுக்கு ஆதரவான நிலை நிரம்பியிருந்ததை அறிந்து அதைச் செயல்படுத்த நினைக்கும் அவளது துணிச்சலையும் அவர் தன் மனதிற்குள் பாராட்டத் தவறவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *