சிறுகதை

சக்ஸஸ்! – ஆவடி ரமேஷ் குமார்

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க தட்டிலிருந்த தாலி, திருமண மண்டபத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான சொந்த பந்தங்களின் ஆசிக்காக ஒரு பழுத்த சுமங்கலி அம்மாள் மூலம் வலம் வந்து கொண்டிருந்தது.

திடீரென்று கூட்டத்தில் சல சலப்பு. பார்வையாளர்களில் ஒருத்தியாய் வந்திருந்த விஜயதாரா தட்டிலிருந்த தாலியை எடுத்துக்கொண்டு மண்டபத்தின் வாயிலை நோக்கி சைகை காட்ட, காக்கி உடையில் இருந்த இரு போலீஸ்கார்கள் உடனே அவளருகே ஓடி வந்து நின்றார்கள்.

” இந்த கல்யாணத்தை நடக்க நான் விட மாட்டேன்.காரணம்,

மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை

கிரிதரும் நானும் உண்மையான காதலர்கள்.

இருவரும் ஒரே ஆபீஸில் வேலை பார்க்கிறோம்.

திடீர்னு இந்த கிரிதர் என்னை கைவிட்டுட்டு

வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ண முடிவெடுத்திருக்கிறார்.

எனக்கு நியாயம் வேணும்.

ஐ வான்ட் ஜஸ்டிஸ்!” என்று சத்தமாக கத்திப்பேசினாள் விஜயதாரா.

மணமேடையிலிருந்த மணப்பெண் சுபிக்‌ஷா தன் கழுத்திலிருந்த மாலையை கழட்டி கீழே வைத்தாள்.மணமகன் கிரிதரை விட்டு விலகி கீழே இறங்கி வந்து கூட்டத்தில் ஒருவராய் நின்றிருந்த தன் அப்பா சுந்தரமூர்த்தியிடம் ,

” அப்பா, இந்த பொண்ணுக்கு

அவர் தாலி கட்டுவது தான்

நியாயம். எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா”

என்றாள்.

” என்ன சம்பந்தி இது!? அநியாயமா ஒரு உண்மையை மறைச்சு என் பொண்ணு வாழ்க்கையை சீரழிக்க முடிவு பண்ணியிருக்கீங்களே..!”

அங்கலாய்த்தார் சுந்தரமூர்த்தி அருகில் நின்றிருந்த கிரிதரின் அப்பாவைப் பார்த்து.

பதில் பேச முடியாமல் அதிர்ச்சியாய் சம்பந்தி தலை குனிந்து நிற்க….

உறவினர்கள் மற்றும் போலீஸ் உதவியுடன்

விஜயதாராவின் கழுத்தில் அதே மணமேடையில் தாலி கட்டினான் கிரிதர்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு.

சுபிக்‌ஷாவின் செல்லுக்கு போன் செய்து விஜயதாரா இப்படி பேசினாள்.

” சுபிக்‌ஷா! உன் கல்யாண பத்திரிக்கையை தோழியான என்கிட்ட நீ கொடுத்த போது,

அதைப் படிச்சுப் பார்த்து அதிர்ச்சியடைஞ்ச நான், எனக்கும் கிரிதருக்கும் இருந்த காதலை பத்தி உன்கிட்ட சொல்லி புலம்பினேன். அதுல நானும் கிரிதரும் ரகசியமா கல்யாணம் செய்துக்க முயற்சி செய்த போது அது கிரிதரோட அப்பாவால தடுக்கப்பட்டதையும் சொன்னேன். உடனே நீ கல்யாணத்தை நிறுத்தாம எங்க கல்யாணம் நாலு பேருக்கு தெரியும்படி நடக்கனும்னா நான் என்ன பண்ணனும்கிறதை நீ கிரிதர்கிட்ட போன்ல கலந்து பேசிட்டு எனக்கு சொன்னே. பிறகு நாம மூனு பேரும் போன்ல வீடியோ காண்பரன்ஸ் மூலமாக அதை உறுதி செஞ்சோம்.

இப்ப நீ போட்டுக் கொடுத்த திட்டம் அருமையா சக்ஸஸ் ஆகிடுச்சு.ரொம்ப தேங்ஸ்டி சுபிக்‌ஷா!”

பதிலுக்கு உற்சாகமாய் சுபிக்‌ஷா:

” ஓ.கே. தாரா. உங்களோட திருமணத்திற்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த் துக்கள்! ” என்றாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *