சென்னை, நவ. 8–
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:–
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை கடந்த சில நாட்களுக்கு முன்பாக சீமான் கடுமையாக விமர்சித்து இருந்தார். சீமானின் இந்த விமர்சனத்திற்கு விஜய் தரப்பில் இருந்து பதிலடி எதுவும் வரவில்லை என்றாலும், தற்போது சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.