சிறுகதை

சகோதரத்துவம் | தருமபுரி சி.சுரேஷ்

மணி அண்ணன் கடையில் டீ சாப்பிடுவது அலாதியான இன்பம் அவர் பாலில் அதிகம் தண்ணீர் சேர்க்க மாட்டார்.

அவர் டீ கடையில் கூட்டம் எப்பொழுதும் குவிந்து கொண்டிருக்கிருக்கும்.

யார் யாருக்கு என்ன டேஸ்ட்ல டீ போடனும்ன்றது அவருக்கு அத்துப்படி கை வந்த கலை.

அது மட்டுமல்ல தொடர்ந்து மணி அண்ணன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வேறு எங்கேயும் டீ அருந்தச் செல்லமாட்டார்கள்.

அதுவும் சாயங்காலத்தில் டீக் கடையில் சூடாக போடப்படும் பஜ்ஜியும் வடையும் சூடான டீக்கு ஏத்த ஜோடியாய் இருக்கும்.

நண்பர்கள் எல்லோரும் ஒரு கூட்டு பறவைகள் போல ஒன்று கூடும் இடம் அந்த டீக்கடைதான்.

டீக்கடையில் காலை,மாலை என எல்லா நியூஸ் பேப்பர்களும் வரும். சூடான அரசியல்,சினிமா செய்திகள் வாசிக்க சரியான இடம்.

கொரோனா வைரஸ்ஸாகிய இந்நாட்களில் மூடப்பட்ட நிலையில் டீக்கடை இருந்தது. அந்த இடத்தைவிட்டு மனோகரனாகிய என்னால் டூவீலரில் கடக்க இயலவில்லை.

மணி அண்ணனை பார்த்து எத்தனை நாளாயிற்று அவரோடு பேசவாவது செய்யலாம்.

ஒரு மரத்தடியில் நிழல் தேடி வண்டியை மனோகரன் நிறுத்தினான். பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து மணிக்கு கால் பண்ணினேன்

“அண்ணே நான்தான் மனோகரன் பேசறேன். எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு அதான்”

“மனோ உங்கள எல்லாம் பாக்காம ரொம்ப போரடிக்குது. கடைப்பக்கம் வரமுடியாமல் கையெல்லாம் கட்டிப் போட்ட மாதிரி இருக்கு”

“ஆமா அண்ணே எனக்கும் ஒரு மாதிரி இருந்துச்சு. அதனால தான் உங்களுக்கு போன் பண்ணி விசாரிக்கலாம்ன்னு தோணுச்சு”

“ஒரே சலிப்பா இருக்கு மனோ. கடையை வைத்து தானே குடும்பத்தை ஓட்ட வேண்டியதா இருக்கு. வேற எந்த வருமானமும் இல்லை”

“நீங்க சொல்றது உண்மைதான். கஷ்டம்தான் அண்ணே”

வோர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேஷன் ஜனவரி மாதத்திலிருந்து எச்சரித்தது கொரோனா வைரஸ் குறித்து நாம கண்டுக்காம விட்டுட்டோம். மார்ச் மாதத்தில் திடீர்னு ஊரடங்கு உத்தரவு கடைகளை எல்லாம் மூடுங்கன்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றது உயிருக்குப் பயந்து எல்லாரும் வீட்ல உட்கார்ந்துட்டு இருக்கோம். இப்ப என்னைய மாதிரி அன்னாட வருமானக்காரங்க என்ன செய்வாங்க. யோசிச்சு பாரு. கொஞ்சம் முன்னாடியே நம்ம அரசாங்கம் விழிப்புணர்வு கொடுத்திருந்தால் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லையே”

“ஆமா நீங்க சொல்றது உண்மைதான். யாரும் இவ்வளவு சீரியஸா ஆகும்னு யோசிக்கலை”

“இல்ல தம்பி வரும் முன் காப்போம்; அப்படின்றது நாம சும்மா எடுத்துக்க கூடாது. ஒவ்வொரு உயிரும் ரொம்ப முக்கியம். நம்ம கதையே அல்லல்ல ஆடுது”

“இல்ல அண்ணே முக்கியமான பொறுப்பில் இருக்கிறவங்களுடைய அலட்சியம்தான் அநேகருடைய வாழ்க்கையில் சிரமத்தை கொண்டு வருது”

“அது உனக்கு புரியுது தம்பி. புரிய வேண்டியங்களுக்கு புரிய மாட்டேங்குது”

“ஆமா அண்ணே சரியாச் சொன்னீங்க. “

“ஆமா தம்பி உன்ன நெனச்சாதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”

“எத்தனையோ பேர் வராங்க டீ சாப்பிடுறாங்க; நலம் விசாரிக்கிறார்கள் . ஆனா இந்த மாதிரி நேரத்துல உன்ன மாதிரி ஒரு சிலர் மட்டும்தான் மறக்காம நலம் விசாரிக்கிறீங்க”

“அண்ணே சாப்பிட்டிங்களா உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா?”

“தம்பி இது வரைக்கும் கடவுள் எந்த குறையும் வைக்கல. எப்படியும் ரேஷனில் 500 ரூபா பொருட்கள் வாங்கிடலாம்.

அரிசி பருப்பு எல்லாம் ஓரளவுக்கு வீட்டில் இருக்கு”

“அண்ணா தப்பா நினைச்சுக்காதீங்க; கேட்கணும்னு மனசுல தோணுச்சு; அதான் விசாரிச்சேன்”

ஐயோ அப்படி எல்லாம் நான் நினைக்கலப்பா. இது மாதிரி நேரத்துல அவங்கவங்க வீட்டில தங்களைப்பத்தி மட்டும்தான் யோசிச்சிட்டு இருப்பாங்க. ஆனா நீ பழகின தோஷத்துக்கு அண்ணன பத்தி யோசிக்கிற. அத நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா”

“சரிங்க அண்ணே வெச்சுடறேன்”

பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் “சார் இது டீக்கடை மணி அண்ணன் வீடா”

“ஆமாப்பா”

சத்தம் கேட்டு மணி வெளியே வர

“சார் நீங்கதானே மணி”

“ஆமாப்பா அதுக்கு என்ன”

“இல்ல சார் உங்களுக்கு ஒரு மூட்டை அரிசி பருப்பு வீட்டுக்கு தேவையான சமையைல் பொருள்கள் எல்லாம் ஒருத்தர் வாங்கி கொடுத்தாரு. நான் கண்ணன் ஸ்டோரில் டெலிவரி பாயாக வேலை செய்கிறேன். உங்க அட்ரஸ் கொடுத்து உங்க வீட்ல சேர்க்கச் சொன்னார்”

யாராக இருக்கும் குழப்பமாக இருந்தார்.

யாரிடம் கேட்பது தயக்கமாய் இருந்தது.

வாங்க மறுத்தார்.

ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் மணிக்கு போன் கால் வந்தது

“மணி அண்ணா… நான்தான் மனோகரன் பேசுறேன்”

“சொல்லு மனோ”

“அண்ணா தப்பா நினைச்சுக்காதீங்க.

நீங்க இலவசமா யார் கொடுத்தாலும் வாங்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.

தயவு செஞ்சு உங்க கூட பிறந்த தம்பியா என்னைய நினைச்சு நான் உங்களுக்கு கொடுத்து அனுப்பினத வாங்கிக்கோங்க” என்றேன்.

மணியால் மறுத்துப் பேச இயலவில்லை.

கன்னங்களில் நேசக் கண்ணீரின் கோடுகள்

“சரி மணி இனிமே அண்ணன் கடைக்கு டீ சாப்பிட வரும் போது அண்ணன் உங்கிட்ட டீக்கு காசு வாங்க மாட்டேன் சரியா”

“சரி அண்ணே”

சந்தோஷத்தோடு மணி எல்லா பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.

மணி மனதுக்குள் சொல்லிக்கொண்டார். கூட பிறந்தால்தான் உறவுகளா இந்த உறவை என்ன சொல்வது? தாய்கள், தகப்பன்கள் வேறாக இருந்தாலும் சகோதரத்துவம் ஒன்றாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *