குப்புசாமி பல நாட்களாக பல வேலைகள் செய்து வந்தாலும் நிரந்தரமான வேலையில் அமர முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் வலம் வந்தார். கடைசியில் புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு பணி கிடைத்ததும் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். முதலில் சில நாட்கள் நோயாளிகள் படும் வேதனை கண்டு மிகவும் கவலையில் ஆழ்ந்தார். உடன் பணி புரியும் கந்தன் அவர்களைப் பார்த்தால் மிகவும் மன வேதனை தான்.
நீ உன்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்றால் வேலையில் கவனம் செலுத்து என்றார். கந்தன் கூறியதில் உள்ள உண்மையை உணர்ந்த குப்புசாமி பணியில் கவனம் செலுத்த துவங்கியதும் அங்குள்ள சூழ்நிலை பழக்கமானது. இந்த மருத்துவமனைக்கு பல ஊர்களிலிருந்து மருத்துவம் பார்க்க நிறைய ஆட்கள் வருவதால் குப்புசாமிக்கு அவர்களுடன் உரையாட சில சமயங்களில் அடுத்தவர் உதவியை நாட வேண்டி வந்தது.
எல்லா நேரமும் மற்றவர் உதவுவார்களா?. சில சமயம் சிலர் உனக்கு வேறு வேலையே இல்லையா என சினங்கொண்டு பேசினார்கள். வருபவர்கள் நாளுக்கு நாள் வட மாநிலத்தவர் என்றானதால் குப்புசாமி இந்தி மொழியை பேசக் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் குப்புசாமிக்கு தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் உரையாட மட்டும் ஆங்கிலம் மற்றும் இந்தியை அரைகுறையாக தெரிந்து கொண்டார்.
தற்போது குப்புசாமி தனது வேளையில் சங்கடமில்லாமல் நகர்த்திக் கொண்டு சென்றார். தன்னால் முடிந்த உதவிகளை மருத்துவமனையில் செய்து வந்து ஒரு நல்ல பெயரையும் எடுத்தார். மேலதிகாரிகள் சில முக்கிய பணிகளுக்கு குப்புசாமியை கூப்பிடும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். செய்யும் வேளையில் கவனம் சிதறாமல் செய்ததால் குப்புசாமிக்கு எப்பவுமே கிராக்கி தான்.
அன்று வேலைக்கு வந்த குப்புசாமி ஒரு நோயாளி இறந்ததாக அறிவித்த வேளையில் அவரைப் பார்க்க யாருமே வராதது கண்டு அவன் சக தொழிலாளியிடம் கேட்க, அவர்கள் இவரை கொண்டு வந்து சேர்த்ததோடு சரி, மற்றபடி ஒரு நாளும் யாரும் வரவில்லை என்றார்கள். என்ன செய்வது அனாதைப் பிணமாக சேர்த்து விட வேண்டும். ஆனால் புற்று நோய் நோயாளி ஆச்சே, நிர்வாகம் என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்றார்கள். வாழும் போதும் சிரமம். இறந்த பிறகும் சிரமமா என்று எண்ணிய குப்புசாமி, நிர்வாகத்திடம் பேசி தானே மற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்து நல்ல முறையில் அடக்கம் செய்தார். தனது சொந்த செலவிலேயே செய்தார் குப்புசாமி. இதற்குப் பின் குப்புசாமி இவ்வாறாக இறந்து போகிறவர்களை நல்ல முறையில் விடை கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
நிர்வாகத்தில் மட்டுமில்ல, வெளியிலும் இவரது தொண்டை பாராட்ட ஆரம்பித்தார்கள். குப்புசாமி இதைப் பற்றியெல்லாம் பெருமையாக எடுத்துக் கொள்ளாமல் தன் கடன் பணி செய்து கிடப்பதே என காரியத்தில் கண்ணாக இருந்தார். சில பத்திரிகைகள் இவரைப் பாராட்டி எழுதின. அவற்றை யாராவது கொண்டு காண்பித்தால் படித்து விட்டு தான் வைத்துக் கொள்கிறேன் என்று கூற மாட்டார். எதையும் பாதுகாக்கும் எண்ணமில்லாதவராக இருந்தார் குப்புசாமி.
அன்று குப்புசாமி கண்ட காட்சி அவரை மிகவும் நிலைகுலையச் செய்தது. இறந்தவரின் உறவினர்கள் இறந்தவர் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாது. இங்கிருந்தே அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லலாம் அல்லது இங்குள்ள குப்புசாமி அவர்களை தொடர்பு கொண்டு மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யலாம் என்று கூற, குப்புசாமி என்ன உலகமடா இது என்று நினைத்த வேளையில் அவர்கள் வந்து குப்புசாமியிடம் ஆலோசனை கேட்க குப்புசாமி வழிமுறைகளை கூறி விட்டு நழுவினார். குப்புசாமி தான் அடக்கம் செய்யும் நபர்களின் பெயர் மற்றும் தேதி இவற்றை ஒரு நோட்டில் எழுதி அதை மட்டும் பாதுகாத்து வருவார். யாராவது உறவினர் இல்லாத ஒருவர் இறந்தால் அதை அனாதை பிணம் என்றால் குப்புசாமி மிகவும் கோபமடைவார். நாளை நமது நிலை எப்படியாகும் என்று யாரறிவார் என்பார். அந்த நோட்டில் இன்று வரை எண்ணிக்கை 426 என்று காட்டியது.
அன்று மருத்துவமனைக்கு வெளி நாட்டில் உள்ள மருத்துவப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் ஆய்வுக்காக வந்திருந்தார்கள். அவர்களுக்கு உதவியாக குப்புசாமி மற்றும் நான்கு பேர்களை நிர்வாகம் நியமித்தது. குப்புசாமி தனது நண்பன் சரணிடம் தயவுசெய்து அவர்கள் கூறுபவற்றை கேட்டு கூறுங்கள் என்றார். அவர்கள் குப்புசாமி மற்றும் நான்கு பேரின் சேவையில் மனம் மகிழ்ந்தார்கள்.
குப்புசாமியை அழைத்த அவர்கள் நாம் இன்று மாமல்லபுரம் செல்லலாம் என்றதும் குப்புசாமி மதியம் 2 மணியளவில் செல்லாம் என்றார். எனக்கு முக்கியமான வேலை உள்ளது என்றதும் சரியென ஒப்புக் கொண்டார்கள்.
குப்புசாமி வந்த அழைப்பை ஏற்று இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்து விட்டு மருத்துவமனை வந்தார்.அவர்கள் தயாராக இருந்தது கண்டு அவர்களுடன் புறப்பட்டார். போகும் போது அவர்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு அவர்கள் மனம் குளிரும் படி பதில் கூறினார்கள் குப்புசாமியும் மற்றவர்களும் . அவர்கள் மிகவும் ஆனந்தம் அடைந்தார்கள்.
அவர்கள் பேச்சோடு பேச்சாக அங்குள்ளவர்களிடம் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி கேட்டுஅறிந்து கொண்டார்கள். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை ரசித்ததோடு மட்டுமல்லாமல் விளக்கம் சொன்னவர்களை மிகவும் பாராட்டினார்கள். அவர்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
குப்புசாமியிடம் வந்து உங்களை மருத்துவமனை சேர்மன்அழைப்பதாகக் கூற, குப்புசாமி மிகுந்த பதைபதைப்புடன் அவரது அறைக்கு செல்ல, அவர் வா குப்புசாமி நலமா என்றார். நலம் தான் ஐயா என்ற குப்புசாமியிடம் வந்திருந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தார் உன்னைப் பற்றிய முழு விவரம் அனுப்பச் சொல்லி கேட்டுள்ளார்கள் என்றார்.
. குப்புசாமி எதற்கய்யா நானென்ன செய்து விட்டேன் அவர்களுக்கு விவரம் கூற என்றதும்
சேர்மன் நீ எழுதி கொண்டு வந்ததைக் கொடு என்றார். மறுநாள் குப்புசாமி தான் எழுதிய பேப்பரைக் கொண்டுசென்று சேர்மனிடம் தந்தார்.
சேர்மன் பார்த்து விட்டு நீ ஒரு நோட்டு வைத்திருப்பாயே, அது எங்கே என்றார். குப்புசாமி அதையும் நீட்டினார்.
அவர் சரி அப்புறம் வந்து பெற்றுக் கொள் என்றார். நானே எழுதி அனுப்புகிறேன் என்றார்.
பத்து நாட்களுக்குக் பிறகு சேர்மன் குப்புசாமியை அழைத்து நீ செய்கிற வேலைக்கு வெகுமதி கிடைச்சாச்சு என்றார். ஒன்றும் புரியாத குப்புசாமி திருதிருவென முழித்த வேளையில்
சேர்மன் ‘‘உனக்கு பொது நல சேவை செய்ததற்காக கௌரவ முனைவர் பட்டம் தரப் போகின்றார்கள். நீ வெளிநாடு சென்ற வர அவர்களே செலவை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றார்.
குப்புசாமி ஐயா என்னால் தனியாக செல்ல முடியாது. எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்றார்.
சேர்மன் நீ உன் மகளுடன் செல் என்றார்.
குமாரிடம் கூறியுள்ளேன் எல்லா ஏற்பாடும் செய்வார் என்றார்.
குப்புசாமி தனது மகளுடன் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர்களுக்கு தங்க வசதி செய்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
குப்புசாமியிடம் அவர் மகள் மொத்தம் 15 பேருக்குத் தான் பட்டம் தரப் போகிறார்களாம். கௌரவ முனைவர் பட்டம் உங்களுக்கு மட்டும் தான் என்றாள்.
விழா நாளன்று வந்து இருந்த எல்லோரும் இருக்கையில் அமர்ந்த பின் சம்பிரதாய நிகழ்வுகளுக்குப் பின் பட்டமளிப்பு விழா தொடங்கியது.
முதலில் அறிவிப்பாளர் குப்புசாமி பெயரைக் கூறி விட்டு அவரைப் பற்றியும் அவரது நற்செயல் பற்றியும் ஆங்கிலத்தில் கூறினார்.
குப்புசாமிக்கு கொஞ்சம் கொஞ்சம் தான்புரிந்தது. அந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். அறிவிப்பாளர் குப்புசாமியை மேடைக்கு அழைக்க, அவர் தன் மகளுடன் சென்றார்.
மேடையில் குப்புசாமி கால் வைத்ததும் ஏற்பட்ட கரவொலி அரங்கையே குலுக்கியது என்றால் மிகையாகாது. குப்புசாமிக்கு கௌரவ முனைவர் பட்டமும் இந்திய ரூபாய் மதிப்பில் எட்டு லட்சத்திற்கான காசோலையும் தந்தார்கள். குப்புசாமி தந்தவரிடம் இந்த தொகையை எனது மருத்துவமனை அபிவிருத்திக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார். அதை அறிவிப்பாளர் அறிவித்தார்.
பின் அங்கு விழாவிற்கு வந்தவர்கள் பலர் மேடையேறி தங்கள் பங்களிப்பாக தொகைகளை தந்தார்கள். வாழ்க்கையில் என்றுமே அனுபவிக்காத அனுபவமாக அமைந்தது இந்த நிகழ்வு குப்புசாமிக்கு. மனதில் தான்மட்டும் பெருமையடைந்தால் போதுமா, நம்மை இந்த நிலமைக்கு உயர்த்திய நிர்வாகமும் பயன் பெற வேண்டுமே என்று எண்ண சூழலில் இந்த தொகை சிறிதளவாவது உதவுமே என்று நினைத்த வேளையில் மிகவும் பதைபதைப்பானார்.
குப்புசாமியை பேச அழைத்த போது அவர் தன்மகளை பேசச் சொன்னார். மகள் அப்பாவைப் பற்றி கூறும் போது ஆனந்தக் கண்ணீரில் திளைத்த குப்புசாமி திடீரென மேடையில் மயங்கி விழ, அங்கிருந்த மருத்துவர்கள் உடனே பரிசோதனை செய்ததில் அதிக பதட்டத்தால் தான்இது வந்தது என்று முடிவு செய்த போது குப்புசாமி மெல்ல நல்ல நிலைமைக்கு வர, கரவொலியால் திணறிய அரங்கம் சப்தமின்றி அடங்கி நின்றது.
சாதாரண மனிதர்களால் ஓரளவிற்குத் தான்ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்என்று குப்புசாமி தன்மகளிடம் கூறினார், உடனே அவரது மகள் உள் நாட்டில் கிடைக்காத பெருமை இங்கு கிட்தை்ததே என்றார்.
குப்புசாமி இதற்கெல்லாம் மயங்கக்கூடாது என்றார், இறந்தவருக்கு செய்யும் சேவையில் மூழ்கிய எனக்கு இவ்வளவு பெரிய வெகுமதியா என்று மகளிடம் கூறினார் குப்புசாமி,
நாம் செய்யும் நற்செயலுக்கு என்றாவது ஒரு நாள் பலன் கிடைக்கும் என்று அந்நாளில் கூறிய ஆசிரியரின் கூற்று மெய்யனாதைக் கண்டு மனதிற்குள் அவருக்கு மானசீகமான நன்றிகளை தெரிவித்தார் குப்புசாமி,
#சிறுகதை