சிறுகதை

கௌரவம்- ராஜா செல்ல முத்து

சந்தான லட்சுமிக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் எந்தப் பிள்ளைகளோடும் ஒட்டி உறவாடாமல் அவள் வீட்டில் இருப்பாள்.

சந்தானலட்சுமி மகனுக்கு திருமணம் முடித்து அவன் தன் இடத்தில் இருந்தான். மகளுக்கும் திருமணம் முடித்து அவளும் தனிக் குடித்தனத்தில் இருந்தாள். சந்தான லட்சுமி இரண்டு பேர்களையும் குறை சொல்லிவிட்டு எந்த வீட்டுக்கும் போகாமல் தன் கணவனை கூட்டிக்கொண்டு காடே பரதேசமாக திரிவாள். ஒட்டு உறவு என்பது யாருடனும் கிடையாது. தான் உண்டு தன் கணவன் உண்டு என்று இருப்பாள். அப்படியே இருந்தாலும் கணவனுடன் எதிரும் புதிருமாக எலியும் பூனையுமாக வாழ்ந்து கொண்டிருப்பாள் சந்தானலட்சுமி .

கணவன் அடிக்கடி புலம்பிக் கொள்வார்.

இப்படி ஒரு ராட்சசி பொம்பளை நான் பார்த்ததே இல்லன்னு ? இவ மனுஷியா என்ன? என்று அவர் சொல்லாத ஆட்கள் இல்லை.

சந்தான லட்சுமியின் குணம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. கணவன் உடன்பிறந்த சகோதரர்களுடன் அல்லது சந்தானலட்சுமி உடன்பிறந்த உறவுகளுடனும் யாருடனும் அவள் இருப்பதில்லை .

தனி மரமாக எதற்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டி பேசுவதாகவே இருந்து கொண்டிருப்பாள்.

என்ன பிறவி இவள்? யாரு கூடவும் ஒட்ட மாட்டேங்கிறா? என்று அவளைப் பற்றி சொல்லாத உறவுகள் இல்லை.

சந்தான லட்சுமி அவள் வைத்ததுதான் சட்டம். அவள் கிழித்த கோட்டை கணவன் தாண்டக் கூடாது என்று இருந்து வந்தாள். ஒரு கட்டத்தில் சந்தான லட்சுமியின் தொந்தரவு தாங்க முடியாமல் அவள் கணவன் தற்கொலை செய்து கொண்டது வேறு கதை.

அதன்பிறகு சந்தானலட்சுமி எங்கே இருக்கிறாள்? எங்கே போகிறாள்? என்ன வேலை செய்கிறாள்? என்பது யாருக்கும் தெரியாது.

சந்தானலட்சுமி கணவன் எதை நினைத்து இறந்திருப்பாரோ அவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் அவர் நிச்சயமாக நினைத்திருப்பார். நான் ஒருத்தன் இருக்கிறதுனால தான நீ இவ்வளவு ஆடுற? நான் இல்லாம போனா, நீ என்ன கஷ்டப் படுறன்னு பாரு என்ற வைராக்கியத்தில் தான் அவர் இறந்திருப்பார் என்று உறவுகள் முழுக்க சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதைக் கூட தன் புத்தியில் சந்தானலட்சுமி கேட்டுக்கொள்ளவில்லை.தன் கணவன் இறந்த பிறகும் அதே பிடிவாத குணத்தைத்தான் வைத்துக் கொண்டிருந்தாள்

மகன் வீட்டிலும் சேருவதில்லை. மகள் வீட்டிலும் சேர்வதில்லை. நாடோடி வாழ்க்கையாக ஒவ்வொரு மாதமும் ஒரு ஊர் என்று சுற்றி அலைந்து கொண்டிருந்தாள்.

இப்போது சந்தானலட்சுமி சுரீர் என்று உரைத்தது. தன் கணவன் இருந்தவரை தான் வைத்ததே சட்டம் தான் வைத்ததே எல்லாம் என்று நினைத்து இருந்தவளுக்கு இப்போது எந்தப் பக்கமும் சேர முடியாமல் தனி மரமாக இருந்தாள்.

அவள் தன் வயிற்றை கழுவுவதற்காக யார்யார் வீட்டிலோ வேலை செய்தாள்? வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு துணி துவைப்பது. அவர்களை கழிப்பிடங்கள் கூட்டிச் செல்வது. அவர்களை துடைத்து விடுவது அந்தப் பெரிய வீட்டில் பாத்திரங்கள் கழுவுவது. கக்கூஸ் கழுவுவது என்று எல்லா வேலைகளையும் செய்து தன் வயிற்றைக் கழுவிக் கொள்வாள். எந்த ஊரிலும் நிரந்தரமாக இரண்டு மாதம் மூன்று மாதம் கூட இருப்பதில்லை.

காரணம் அவளின் குறுக்கு புத்தி. இப்படியாக போய்க் கொண்டிருக்கும் நாளில், ஒரு நாள் சந்தானலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

மகன் இருக்கும் ஊரிலிருந்து சந்தானலட்சுமி இருக்கும் இடம் பல நூறு கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தது .அப்போது சந்தானலட்சுமி மகனுக்கு தகவல் சொன்னாள்

மகன் போய் சந்தானலட்சுமியைப் பார்த்துவிட்டு கையோடு அம்மாவையும் கூட்டி வந்தான்.

மகன் வீட்டிற்கு வந்தவள் அங்கு தன்னைப் பெரிய ஆளாக நினைத்து நடந்து கொண்டாள். உட்கார்வதற்கு ஒரு சேர். கால் வைப்பதற்கு ஒரு சேர் என்று அதிகாரத் தோரணையில் அமர்ந்திருப்பாள். மெத்தையில் படுத்தால் கையில் காபி. தலைக்கு மேலே காற்றாடி என்று அவளுடைய அதிகாரம் விரிந்து பரந்து கிடந்தது

ஏங்க உங்க அம்மா சாப்பிட்ட தட்டை கூட கழுவ மாட்டேங்குது .மத்தவங்க வேலையக் கூட செய்ய வேண்டாம். அது சாப்பிட்டு தட்ட கூட கழுவக் கூடாதா?. பாத்ரூம் போன சரியா தண்ணீர் ஊத்துறதில்ல. கண்ட இடத்தில எச்சில் துப்புது. குழந்தைக இருக்கற வீட்டில அது சரிப்பட்டு வராது என்று மருமகள் கணவனிடம் புகார் செய்தாள்.

மகன் மனைவி சொல்வதை அவ்வளவாக கேட்கவில்லை.

எங்க அம்மா வந்திருக்குன்னு, நீ புகார் சொல்ற . அப்படி இருக்காது என்று முதலில் நம்பியவனுக்கு போகப்போக சந்தான லட்சுமியின் சுயரூபம் தெரிந்தது.

மனைவி என்ன சொன்னாலும் அதையே செய்து கொண்டிருந்தாள் சந்தானலட்சுமி.

அப்போது அவன் மனதில் நினைத்தான்.

நாம போயி கூப்பிடும்போது இன்னொரு வீட்டில பத்து பாத்திரங்கள, அங்க இருக்கறவங்கள குளிப்பாட்டி விட்டுட்டு, கக்கூஸ் கழுவி வீடு கூட்டிக் கொண்டிருந்த அம்மா, இங்கே வந்ததும் இவ்வளவு கெளரவம் காட்டுது.

ஏன் இப்படி ?அடுத்தவங்க வீட்டுல எல்லாம் வேலையும் செஞ்சிட்டு தன்னுடைய வீட்டில் வேலை செய்ய வருத்தமா? என்று சந்தானலட்சுமியை மகன் கடிந்து கொண்டான்.

அப்போதும் அவள் தன் செய்கையை மாற்றவில்லை.

இந்த வீடும் எத்தனை நாள் என்று சந்தானலட்சுமி தெரியாது. அவளின் மனதை மாற்றும் வரை அல்லது மரணம் வரும் வரை அம்மாவின் வாழ்க்கை நாடோடியாகத் தான் இருக்கும் என்பது மகனுக்குத் தெளிவாக தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *