செய்திகள்

கோவை வேளாண்மை பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து

Makkal Kural Official

மாணவர்கள் அதிர்ச்சி

மீண்டும் தேர்வு நடத்த திட்டம்

கோவை, ஜூலை 10–

கோவை வேளாண்மை பல்கலைக்கழக முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.

கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும் 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை ஏராளமான மாணவர்கள் எழுதி, முதல்நிலை படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு நேற்று இரவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிர்ச்சி

வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ-மெயிலில், ஜூன் 23-ல் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திரும்பி வழங்கப்படும். 2024–-2025-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறுவது குறித்தும், தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை படிப்பு செப்டம்பர் மாதம் முடியும் நிலையில், செப்டம்பர் இறுதியிலேயே முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும். மாணவர்கள் சேர்க்கை தாமதம் இன்றி நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *