செய்திகள்

கோவை ரோட்டரி சங்க பவள விழா: மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

கோவை, பிப். 12

தேசத்தின் வளர்ச்சியில் சமூக சேவை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என, கோவை ரோட்டரிசங்க பவள விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் கோவை ரோட்டரி சங்க பவள விழாவை முன்னிட்டு பித்தளையால் ஆன ரோட்டரி சக்கரம் திறக்கப்பட்டது. இதனை 2011 12ம் ஆண்டில் சர்வதேச ரோட்டரி தலைவராக இருந்த கல்யாண் பானர்ஜி துவக்கி வைத்தார்.

இதையடுத்து, அவினாசி சாலையில் உள்ள ஜிடி கலையரங்கில் பவள விழா தொடங்கியது. விழாவுக்கு, தலைமை விருந்தினராக கல்யாண் பானர்ஜி பங்கேற்றார். கவுரவ விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

ரோட்டரி சங்கத்தின் வரலாறு குறித்து பவள விழா தலைவர் ஜி.கார்த்திகேயன் கூறுகையில்,

‘‘ ரோட்டரி சர்வதேச சங்கம், 150 நாடுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கிளப்புகளில் ஒன்றாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். கடந்த 1944 ம் ஆண்டு துவங்கிய சேவையின் வலுவான வரலாறு, 75 ஆண்டுகளை எட்டியுள்ளது. கோவையின் விஞ்ஞானியாக திகழ்ந்த ஜி.டி.நாயுடு, இதன் தலைவராக இருந்துள்ளார். இந்த பவள ஆண்டு கொண்டாடட்டத்தில், இன்னும் பல சிறப்பான நிகழ்வுகள் நடக்கவுள்ளன. இந்தநிகழ்ச்சி பழைய, புதிய உறுப்பினர்களை ஒன்றாக இணைத்துள்ளது’’ என்றார்.

உறுப்பினர்கள் கவுரவிப்பு

ரோட்டரி கிளப் தலைவர் ஜோசப் பவுல் கூறுகையில்,

‘‘ இந்த கிளப், பள்ளியை தத்தெடுத்தல், புதிய வகுப்பறைகளை கட்டுதல், தேவையான மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதற்கான பல புதிய திட்டங்களையும் இந்த ஆண்டு வழக்கமான திட்டங்களுடன் சேர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது’’ என்றார்.

தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் இருந்த அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.

கூட்டு முயற்சியின் பலன்

விழாவில், கவுரவ விருந்தினராக பங்கேற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில்,

‘‘தேசத்தின் வளர்ச்சியில் சமூக சேவை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 70 ஆண்டுகள் பெருமைமிக்க வரலாற்றை கொண்டுள்ள இந்த அமைப்பு, ஜிடி நாயுடுவின் பெயரை கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இஸ்ரோவில் பணியாற்றியபோது, கூட்டு முயற்சியின் பலனை உணர முடிந்தது. இங்கு சமுதாய பணியிலும் அதன் பிரதிபலிப்பை காண முடிகிறது,’’ என்றார்.

விழாவில், ரோட்டரி ஆளுநர் ஏ.வி.பதி, வக்கீல் சுந்தரவடிவேலு, சங்க உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட கோவை ரோட்டரி மாவட்டத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *