செய்திகள்

கோவை மாவட்ட தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்

கோவை, செப். 16

கோவை மாவட்ட தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ராசாமணி அறிவுறுத்தி உள்ளார்.

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தனியார் ஆய்வகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதுடன், அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டவுடன், அவர்கள் நோய் தொற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொரோனா தொற்று சிகிச்சை மையம் என தன்மைக்கேற்றவாறு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

பரிசோதனை முடிவு

கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் தனியார் ஆய்வகங்கள் தங்களின் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகளை தாமதமின்றி வெளியிட வேண்டும் எனவும், மாதிரிகள் பெறப்பட்டவுடன் 12 மணி நேரத்திற்குள் முடிவுகளை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும், உடனடியாக அவர்களின் தொடர்பு விவரத்தினை சுகாதாரத்துறை மற்றும் கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து தனியார் ஆய்வகங்களிலும் பல்ஸ் -ஆக்சி மீட்டர் மூலம் அவர்களை அவசியம் பரிசோதனை செய்து கொள்வதுடன், அதில் அறிகுறி உள்ளவர்களை சோதனை முடிவு வரும் முன்னரே மருத்துவமனைக்கு அனுப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினை குறைத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்தும் வரும் நடவடிக்கைக்கு தனியார் பரிசோதனை மையங்கள் மிகுந்த ஒத்துழைப்பு தரவும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ராசாமணி தெரிவித்தார்.

கூட்டத்தில், மாநகராட்சி கமிஷ்னர் குமரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை கமிஷ்னர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் காளிதாசு, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா தனியார் கொரோனா தொற்று பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *