கோவை, ஆக. 6–
கோவை மேயர் வேட்பாளருக்கு யாரும் போட்டியிடாத சூழலில் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். அவரது உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக, தனது மேயர் பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த மாதம், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜிநாமா கடிதத்தை கல்பனா அளித்தார்.
ரங்கநாயகி தேர்வு
தொடர்ந்து, ஜூலை 8-ம் தேதி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் சிறப்பு மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு துணைமேயர் ரா.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். கல்பனா ஆனந்தகுமார் ராஜிநாமா செய்தது தொடர்பாக கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவரது ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கோவை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோவையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கணபதி பகுதியை சேர்ந்த இவர், முதல்முறை கவுன்சிலர் ஆனவர். இவர், கோவை எம்.பி. ராஜ்குமாரின் ஆதரவாளர் ஆவார். இந்நிலையில், கோவை மேயர் வேட்பாளருக்கு யாரும் போட்டியிடாத சூழலில் திமுக வேட்பாளரும், 29வது வார்டு கவுன்சிலருமான ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கோவையின் இரண்டாவது பெண் மேயரும், கோவையின் 7வது மேயரும் ஆவார்.