ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன் வருத்தம்
கோவை, ஜூன் 12–
கோவை மக்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக முடிவெடுக்கிறார்கள் என்று ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:–
“ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்தியா மகத்தான நாடாக முன்னேற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக வாக்களித்து இருக்கிறார்கள்.
கோவை மக்கள் முடிவு
ஆனால், ஒரே ஒரு வருத்தம் இருக்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், கோவை போன்ற ஒரு மாநகரம் மற்ற மாநகரங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும். தமிழ்நாடும் மற்ற மாநிலங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும்.
ஆனால் ஒவ்வொரு முறையும் கோவை மக்கள் வேறு விதமாக முடிவெடுக்கிறார்கள். அந்த வளர்ச்சியோடு சேர்ந்து இந்த பயணத்தை தொடர்வதற்கு வகை இல்லாமல் செய்து விடுகிறார்கள் என்ற வருத்தம் கொடுக்கிறது. என்னதான் ஒரு மகத்தான முன்னேற்றத்துக்காக சிந்தனை செய்தாலும் மக்கள் ஆதரவு தரும் வரை காத்திருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம் என்றார்.