செய்திகள்

கோவை நகைக் கடை கொள்ளையனின் தந்தை திடீர் தற்கொலை

தருமபுரி, டிச. 7–

கோவை நகைக் கடை கொள்ளையனின் தந்தை திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி மாரம்மாள். இவர்களுக்கு விஜய் (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.கோவையில் உள்ள பிரபலமான நகை கடையில் 100 பவுன் நகை மற்றும் வைர நகைகளை விஜய் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி ஆனைமலையில் உள்ள விஜயின் மனைவி நர்மதா என்பவரையும், தருமபுரி மாவட்ட அரூரை அடுத்த தும்பலஅள்ளியில் உள்ள மாமியார் யோகராணியையும் கைது செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கோவை மற்றும் தருமபுரி மாவட்ட தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த விஜயை தேடிவந்தனர்.

இந்த நிலையில் விஜய் இருக்கும் இடத்தை குறித்து அவரது தந்தை முனிரத்தினத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது முனிரத்தினம் வீட்டில் இருந்த 38 கிராம் நகைகளையும், 2 செல்போன்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது பொம்பட்டி மலை கிராமத்தில் மர்ம நபர் உலாவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த நபர் விஜயாக இருக்கக்கூடும் என்று எண்ணி முனிரத்தினத்தையும் உடன் அழைத்து சென்று தேடிவந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு தனிப்படை போலீசார் முனிரத்தினத்தை அவரது வீட்டில் விட்டு சென்றனர். வீட்டில் மாரம்மாளும், அவரது மருமகன்களும், மகள்களும் இருந்தனர். பின்னர் அவர்கள் உறவினர் ஒருவரது வீட்டில் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த முனிரத்தினம் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து மாரம்மாள் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனிரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளையன் விஜயின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *