கோவை, ஆக. 10–
கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று காலை தொடங்கியது.
பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் இன்று முதல் கோவை – அபுதாபி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.40 மணிக்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் 163 பயணிகள் வந்தனர். மீண்டும் காலை 7.30 மணிக்கு கோவையில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் அபுதாபி புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து கோவை தொழில்துறையினர் கூறும்போது, “கோவை- அபுதாபி இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு உலக நாடுகளுக்கு கோவையிலிருந்து செல்ல இந்த விமான சேவை பெரிதும் உதவும்” என தெரிவித்தனர்.