கோவை, பிப். 25-
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து குவித்ததாக கோவை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் அம்மன் கே.அர்ச்சுனன். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் கோவை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதற்கு முன்பு 2016–21 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 962 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது நேற்று வழக்கு பதிந்தனர். அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எம்.எல்.ஏ. அம்மன் கே அர்ச்சுனன் வீட்டிற்கு வந்தனர். வெளியாட்கள் உள்ளே நுழையவும், வீட்டில் இருப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதித்தனர். வீட்டிலிருந்து அம்மன் கே.அர்ச்சுனனிடம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் உங்களது வீட்டில் சோதனை நடத்த வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதற்கு அவரும் ஒத்துழைத்தார். அவரது வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அவர்கள் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்தனர். இவரது வீட்டு முன் பகுதியில் உள்ள ஒரு அறையில் தனி அலுவலகமும் உள்ளது, அங்கும் போலீசார் சோதனை நடத்தினர். சோதனை குறித்து தகவல் அடைந்த அண்ணா தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அவரது வீட்டுக்கு முன்பு குவிந்தனர். இதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.