கோவை, ஜூலை 13–
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான செந்தில் கார்த்திகேயன் அலுவலகத்தில் கடந்த மாதம் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சீல் வைத்து விட்டு சென்ற நிலையில் 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள், ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு செய்தனர்.
இதுபோன்று ஏற்கனவே சீல்வைக்கப்பட்ட கோவை பந்தயச்சாலை பகுதியில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் அலுவலகம் மற்றும் சீல்வைக்கப்பட்ட சித்ரா அருகே உள்ள ரங்கநாயகிபுரம் பகுதியில் உள்ள வீடு உள்ளிட்டவற்றின் சீலை திறந்து மறு ஆய்வு செய்தனர். சி.ஆர்.பி.எப் வீரர்களின் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் இந்த மறு ஆய்வு சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே பிரபலமான ஸ்டீல் நிறுவனமான கிஸ்கால் நிறுவனத்தின் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கரூரிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 11 மணி முதல் சி.ஆர்.பி.எப் வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோன்று ராமநாதபுரம் நாடார் வீதியில் உள்ள அருண் அசோசியேட்ஸ், அரவிந்த் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் வரிஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடத்தபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் , இதில் கிஸ்கால் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணப்பன், திமுக மாநிலப்பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.