கோவை, ஜூலை 29–
கோவையில் யானை தாக்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த விராலியூர் பகுதியில் யானையை விரட்டிச் சென்ற இளைஞரை யானை திருப்பித் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கோவை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. உடனடியாக பூலாம்பட்டி வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப் பகுதிக்கு விரட்டினர்.
பின்னர் மீண்டும் இரவு பத்து மணியளவில் வந்த ஒற்றைக் காட்டு யானை ஆக்ரோஷமாக அங்கு, இங்கும் சுற்றி திரிந்ததால் யாரும் காட்டு யானை அருகே செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் கூறினர். இருந்த போதிலும் யானையை விரட்ட முற்பட்ட விராலியூர் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது 24 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பர் ஹரிஷ் வயது 22 தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இருவரும் குடியிருப்பு பகுதிக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட பின்னாடியே ஓடிச் சென்று உள்ளனர்.
ஆக்ரோஷத்தில் இருந்த காட்டு யானை இவர்களைப் பார்த்து திரும்பி தாக்கத் தொடங்கியது. அதில் ஹரிஷ் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் யானை துரத்தியதில் தடுமாறி கீழே விழுந்த கார்த்தியை யானை தூக்கி வீசி மிதித்து சென்றதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஹரிஷை அங்குள்ள டாட்டா ஏ.சி வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.