கோவை, செப்.23-–
கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:–
சனாதனம் என்ற ஒரு வார்த்தையைச் சொன்னதற்காக சிறுபிள்ளையைத் தாக்குகின்றனர். எங்களுக்கு அந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் பெரியார். சாமி இல்லை என்று கூறியது மட்டும் பெரியாரின் பணி அல்ல. கடைசிவரை சமுதாய நலனுக்காக வாழ்ந்தவர் பெரியார். தி.மு.க. அல்லது வேறு எந்தக் கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது. அவர் தமிழ்நாட்டுக்கே சொந்தமானவர்.
மத்திய அரசு விரைவில் மக்களவைத் தேர்தலை நடத்தும். கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு உள்ளாகக் கூடாது என்று கருதினேன். எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி என்னை திமுகவுக்கு வருமாறு அழைத்தார்.
அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப் போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரஸில் இருப்பதால், காங்கிரஸில் சேருகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அதாவது, அப்போதே அரசியலில் களமிறங்கியிருக்க வேண்டும்.
கோவையில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அனைத்து பூத்களிலும் பணியாற்ற 40 ஆயிரம் பேர் வேண்டும். கோவைக்கு வாங்க என்று என்னைக் கூப்பிடுவது மட்டும் போதாது, களப் பணியாற்ற 40 ஆயிரம் பேரைத் தயார் செய்ய வேண்டும். எனக்கு மூக்கு உடைந்தாலும்கூட பரவாயில்லை, மருந்துபோட்டுக் கொண்டு வந்து, மீண்டும் கோவை தொகுதியில் போட்டியிடுவேன்.
கட்சிக்குப் புதிதாக வருபவர்களுக்கு வேலியாக இருக்காமல், ஏணியாக இருக்க வேண்டும். கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை. உறவுதான் நிரந்தரம். பணியாற்றினால் பதவி நிரந்தரம். ஒருவரே பிரதமராக இருக்க வேண்டும் என்று கருதுவது சர்வாதிகாரம். இந்தி ஒழிக என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழ் வாழ்க என்று தான் சொல்கிறோம்.இந்தி பேசினால் தான் வேலை என்றால், அந்த வேலை வேண்டாம். அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம். இவ்வாறு அவர் பேசினார்.